Thu. Feb 5th, 2026

போடி, பிப். 04:
மக்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் சந்திக்க மறுப்பதோடு, அடிப்படை வசதிகளை செய்து தர முன்வராத போடி நகராட்சி ஆணையரைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் நகராட்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு வந்தது.

அலட்சியப் போக்கும் மக்கள் கொதிப்பும்.

போடி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலை வசதி, குடிநீர் விநியோகம், சுகாதாரப் பணிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முற்றிலும் முடங்கிக் கிடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இது குறித்து மனு அளிக்க வரும் பொதுமக்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் நகராட்சி ஆணையர் நேரில் சந்திக்க மறுப்பதாகவும், மக்களின் தேவைகளை அலட்சியப்படுத்துவதாகவும் கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

நகராட்சி அலுவலகம் முற்றுகை.

இந்த மக்கள் விரோதப் போக்கை கண்டித்து, நாம் தமிழர் கட்சியின் போடி தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் அக்கட்சியினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆணையரின் செயல்பாடுகளை கண்டித்தும், நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்குக்கு எதிராகவும் கடும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனால் நகராட்சி அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பணிந்த நகராட்சி நிர்வாகம்.

போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி நகராட்சி ஆணையர் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரைச் சந்தித்து கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார்.

உடனடி நடவடிக்கைக்கு உறுதி.

பேச்சுவார்த்தையின் போது,

நகராட்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அமர்வதற்கான இருக்கை வசதிகள்,

சுத்தமான குடிநீர் ஏற்பாடு,

நகராட்சி வளாகத்தில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்து பராமரித்தல்
போன்ற அடிப்படை பணிகளை உடனடியாக மேற்கொள்வதாக ஆணையர் உறுதியளித்தார்.

வாக்குறுதி நிறைவேறாவிட்டால் அடுத்தகட்ட போராட்டம்.

நகராட்சி ஆணையரின் உறுதிமொழியைத் தொடர்ந்து, போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்த நாம் தமிழர் கட்சியினர், அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தகட்டமாகப் பெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.


செய்தி தொகுப்பு :
அன்புபிரகாஷ் முருகேசன்
தேனி மாவட்ட தலைமை செய்தியாளர்

By TN NEWS