Wed. Jan 14th, 2026

தமிழ்நாடு டுடே | சிறப்பு கட்டுரை

தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலும் பேருந்து வழியாகப் பயணிப்பவர்கள், இரு மாநிலங்களின் பேருந்து நிலையங்களுக்கிடையேயான பராமரிப்பு, சுகாதாரம் மற்றும் கட்டமைப்பு வசதிகளில் உள்ள பெரும் வித்தியாசத்தை எளிதில் உணர முடியும்.

தமிழ்நாட்டில், குறிப்பாக பெருநகரங்களிலும் மாவட்டத் தலைநகரங்களிலும் உள்ள பல பேருந்து நிலையங்கள் மிக மோசமான பராமரிப்புடன் காணப்படுகின்றன. அதே நேரத்தில், கர்நாடகாவில் பெருநகரங்கள் மட்டுமின்றி சிற்றூர்களில்கூட நவீன கட்டமைப்பு வசதிகளுடன் பேருந்து நிலையங்கள் செயல்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.

கழிப்பறைகள்: வளர்ச்சி அளவுகோலா?

மைசூர் பேருந்து நிலையத்தில் சுத்தமாக பராமரிக்கப்படும் கழிப்பறைகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு,
மறுநாள் மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மிக மோசமான கழிப்பறை சூழல் பெரும் ஏமாற்றத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது.

வளர்ந்த மாநிலம் எனச் சொல்லப்படும் தமிழ்நாட்டில்,
பொது இடங்களில் அடிப்படை சுகாதார மேலாண்மை கூட இல்லாத நிலை பலரிடமும் கேள்விகளை எழுப்புகிறது.

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் கழிப்பறைகள்,
இலவசமாக அறிவிக்கப்பட்ட பின்பு மேலும் பராமரிப்பின்றி நாற்றமடிக்கும் நிலையில் உள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

பிளாட்பாரம் – பெயரளவில் மட்டுமே?

தமிழகப் பேருந்து நிலையங்களில்,பிளாட்பாரம் அகலம் மிகக் குறைவு, ஆக்கிரமிப்புகள் அதிகம்,கடைகள் பேருந்து நிற்கும் இடம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளனபயணிகள் நிற்கவும், நடக்கவும் இடமில்லாத நிலை பல இடங்களில் காணப்படுகிறது.சமீபத்தில் கட்டப்பட்ட ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில்கூட,பிளாட்பாரம் அகலம் நான்கு அடிகளுக்கும் குறைவாகவும்,அமர்வதற்கான இருக்கைகள் இல்லாமலும் இருப்பது சமூக ஊடகங்களில் விமர்சனத்துக்கு உள்ளானது.

தளம் அமைப்பதில் அறிவியல் இல்லையா?

பல தமிழக பேருந்து நிலையங்களில்,தார் ரோடு போல அல்லது சாதாரண சிமெண்ட் தளமாக பேருந்து நிலைய தரை அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், அழுத்தமான பேருந்து போக்குவரத்தைத் தாங்க,
தளம் கான்கிரீட் + மேற்பரப்பு வலுவூட்டல் (multi-layer compaction) முறையில் அமைக்கப்பட வேண்டும் என்பது அடிப்படை பொறியியல் அறிவு.

இந்த அறிவியல் முறைகள் பின்பற்றப்படாததாலேயே,
தமிழக பேருந்து நிலையங்களில் தரை பெயர்தல், குண்டும் குழியும் அடிக்கடி உருவாகின்றன.

கர்நாடகா பேருந்து நிலையங்கள்: வேறுபட்ட அணுகுமுறை:

கர்நாடகாவில்,15–20 அடி அகலமான பிளாட்பாரங்கள், கிரானைட் தளங்கள்,கட்டுப்படுத்தப்பட்ட கடைகள்,இலவசமானாலும் சுத்தமாக பராமரிக்கப்படும் கழிப்பறைகள் என்று முழுமையான கட்டமைப்பு திட்டமிடல் காணப்படுகிறது.கடந்த பத்து ஆண்டுகளாக மைசூரில் வசிக்கும் அனுபவத்தின் அடிப்படையில்,மைசூர் பேருந்து நிலையத்தில்,நீர் தேக்கம்,தரை பெயர்தல்,நாற்றமடிக்கும் கழிப்பறைகள் எதையும் இதுவரை காணவில்லை என பயணிகள் தெரிவிக்கின்றனர்.

ஊழலா? அலட்சியமா?

தமிழக பேருந்து நிலையங்களின் மோசமான நிலைக்கு
ஊழல், கண்காணிப்பு இல்லாமை, திட்டமிடல் குறைபாடு
ஆகியவையே முக்கிய காரணங்களாகத் தெரிகின்றன.

கர்நாடகா தமிழ்நாட்டை விட சிறந்த மாநிலம் என்று சொல்ல முடியாது.ஆனால்,சில அடிப்படை கட்டமைப்புகளை உறுதியாக செயல்படுத்த அனுமதிக்கும் நிர்வாக ஒழுங்கை
நாம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

முடிவுரை.

ஒரு இடத்தில் சிங்கப்பூர் மாதிரி பேருந்து நிலையம்,
மற்றொரு இடத்தில் சாக்கடை போன்ற நிலையம் –
இதுதான் வளர்ச்சி என்றால்,அது சமச்சீர் வளர்ச்சி அல்ல; முதலாளித்துவ அரசியலின் அசிங்கமான வடிவம்.

அடிப்படை வசதிகள் எல்லோருக்கும் சமமாக கிடைக்கும் வரை,பேருந்து நிலையங்கள் பற்றிய இந்த விவாதம் தொடர வேண்டியது அவசியம்.

✍️ V. ஜெய்சங்கர்
மக்கள் தொடர்பு அதிகாரி
தமிழ்நாடு டுடே
கள்ளக்குறிச்சி மாவட்டம்

By TN NEWS