Wed. Jan 14th, 2026

சின்னமனூர், தேனி | ஜனவரி 13, 2026

தேனி மாவட்டம் சின்னமனூர் ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளியில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, மனதை நெகிழ வைக்கும் மனிதநேய நிகழ்வு ஒன்று நடைபெற்றது.

விருப்பத்திற்கேற்ப புத்தாடைகள் – வழக்கத்தை மாற்றிய உதவி.

வழக்கமாக வழங்கப்படும் தான உதவிகளிலிருந்து மாறுபட்டு,
மாணவிகளின் சுயமரியாதை மற்றும் விருப்பத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.

இப்பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர் (பெயர் குறிப்பிட விரும்பாதவர்),
பொங்கல் பண்டிகையை மாணவிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில்,
அவர்களை நேரடியாக ஜவுளிக்கடைக்கு அழைத்துச் சென்று,
தங்களுக்குப் பிடித்த நிறம், வடிவமைப்பு, மாடல் ஆகியவற்றில்
புத்தாடைகளை அவரவரே தேர்வு செய்துகொள்ள அனுமதித்தார்.

இதனால், மாணவிகளின் முகங்களில் உண்மையான மகிழ்ச்சி தென்பட்டது.

பள்ளி நிர்வாகம் பாராட்டு.

இந்த உயரிய மனிதநேயச் செயலைப் பாராட்டும் விதமாக,
பள்ளி வளாகத்தில் நன்றி நவிலல் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்விற்கு,
பள்ளிக்குழுத் தலைவர் திரு. L.K. சிவமணி அவர்கள் தலைமையிலும்,
பள்ளிச் செயலர் திரு. K. மாரிமுத்து BA., அவர்கள் முன்னிலையிலும்,

பள்ளி நிர்வாகத்தினர் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

மேலும்,
நிர்வாகக் குழு உறுப்பினர்கள்
திரு. K. சங்கரநாராயணன் MA., BL.,
திரு. K. பாஸ்கரன்,
திரு. R. பாண்டியன்,
திரு. D. ஜெயச்சந்திரன்,
திரு. K. ஜோதிக்குமார்,
திரு. V. இளங்கோவன் MA.,
மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு,
முன்னாள் மாணவரின் சமூக அக்கறையைப் போற்றினர்.

“முன்னுதாரணமாகத் திகழும் செயல்” – தலைமை ஆசிரியர்
பள்ளி தலைமை ஆசிரியர் திரு. S. பாண்டித்துரை அவர்கள் பேசுகையில்,

“தான் பயின்ற பள்ளியின் மீது அக்கறை கொண்டு,
தற்போதைய தலைமுறை மாணவிகளின் மகிழ்ச்சிக்காக
தாராளமாக உதவிய இந்த முன்னாள் மாணவரின் செயல்
மற்றவர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகும்,”
என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

“நாங்களே தேர்வு செய்தோம் – ரொம்ப சந்தோஷம்!”
மாணவிகளின் நெகிழ்ச்சிப் பேட்டி.

புத்தாடைகளைப் பெற்றுக் கொண்ட மாணவிகள் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.

மாணவி ஒருவர் கூறுகையில்:

“பொதுவாக யாராவது உதவி செய்தால்,
அவர்களே ஒரு டிரஸ் கொடுப்பாங்க.

ஆனா, எங்க பள்ளியில் படிச்ச அண்ணன்
எங்களை ஜவுளிக்கடைக்கே கூட்டிட்டுப் போய்
‘உங்களுக்குப் பிடிச்ச டிரஸ்ஸை நீங்களே எடுத்துக்கோங்க’ன்னு சொன்னது
ரொம்ப சந்தோஷமா இருந்தது.

இந்தப் பொங்கல் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.
அவருக்கும் அவரோட குடும்பத்துக்கும் மனமார்ந்த நன்றி.”

மற்றொரு மாணவி கூறுகையில்:

“இந்த வருஷம் பொங்கலுக்குப் புத்தாடை கிடைக்குமா
ன்னு யோசிச்சுட்டு இருந்தோம்.

எங்க பள்ளியில் படிச்ச ஒருத்தரே
இவ்வளவு பெரிய மனசோட உதவி செஞ்சது
எங்களுக்குப் பெரிய கௌரவமாக இருக்கு.
அவர் யாருன்னு தெரியலனாலும்,
அவரோட அன்பு எங்களுக்கு புரிஞ்சுது.
அவர் நல்லா இருக்கணும்னு நாங்க எல்லாரும் வேண்டிப்போம்.”

நிர்வாகத்தினர் கருத்து:

“பண்டிகை காலத்தில் மாணவிகளின்
தனிப்பட்ட விருப்பத்திற்கு மதிப்பளித்தது
மிகச் சிறந்த பண்பு.

தனது பெயரைக் கூட வெளியிட வேண்டாம் என
கேட்டுக் கொண்டது,
அந்த முன்னாள் மாணவரின் அடக்கத்தையும்
உயரிய மனப்பான்மையையும் காட்டுகிறது,”
என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

✒️செய்தி & புகைப்படம்:

அன்பு பிரகாஷ் முருகேசன்
தேனி மாவட்ட தலைமைச் செய்தியாளர் & புகைப்படக் கலைஞர்
தமிழ்நாடு டுடே

By TN NEWS