Sat. Jan 10th, 2026

120 நாட்களில் அனுமதி – மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்.

அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாகப் பிடிபடும் வழக்குகளில்,வழக்கு தொடர அரசு அனுமதி தருவதில் ஏற்படும் தாமதம் காரணமாக பலர் சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பித்து வந்த நிலை நீண்ட காலமாக
பெரும் விமர்சனத்துக்குரியதாக இருந்து வந்தது.இந்தச் சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்,
மத்திய அரசு புதிய சட்டத்திருத்தத்தை அமல்படுத்தியுள்ளது.

இதுவரை இருந்த நடைமுறை:

லஞ்ச ஒழிப்பு போலீசார், அரசு ஊழியரை லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாகப் பிடித்தால், உடனடியாக கைது செய்து விசாரணை நடத்த முடியும்.

ஆனால்,
கைது செய்த பிறகு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை (Charge Sheet) தாக்கல் செய்ய, அரசின் வழக்கு தொடர அனுமதி அவசியமாக இருந்தது. இந்த அனுமதி வழங்குவதில்
பல மாதங்கள், சில நேரங்களில் ஆண்டுகள் வரை தாமதம் ஏற்பட்டு, வழக்குகள் பலவீனமடைவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

புதிய சட்டத்திருத்தம் என்ன சொல்கிறது?

புதிய பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டத்தின் படி:

அரசு அனுமதி கோரும் விண்ணப்பத்தின் மீது120 நாட்களுக்குள் (4 மாதங்கள்) அரசு ஒப்புதல் வழங்கவோ அல்லது மறுக்கவோ வேண்டும்.120 நாட்களுக்குள் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றால்,அந்த அனுமதி தானாகவே வழங்கப்பட்டதாகக் கருதப்படும்.

இதன் பின்னர்,
லஞ்ச ஒழிப்பு போலீசார் நேரடியாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம்.

FIR & கைது – சட்ட நிலை:

ஊழல் தடுப்புச் சட்டம் – பிரிவு 17A
➤ அரசு ஊழியர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய
பொதுவாக முன் அனுமதி தேவை.

ஆனால்,
லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாகப் பிடிக்கப்படும் வழக்குகளுக்கு இந்த முன் அனுமதி தேவையில்லை.
போலீசார் உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்த முடியும்.

அரசு அனுமதி மறுத்தால் என்ன?

போதிய ஆதாரங்கள் இருந்தும் அரசு அனுமதி வழங்க மறுத்தால், அந்த மறுப்பு ஆணையை உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியும்.
மறுப்பு ஆணை தர்க்கமற்றதாகவோ, உண்மைகளை மறைப்பதாகவோ இருந்தால் நீதிமன்றம் அதை ரத்து செய்யும்.

உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு:

சுப்ரமணிய சுவாமி Vs மன்மோகன் சிங் வழக்கு:
➤ வழக்கு தொடர அனுமதி வழங்குவதில் தாமதம்
நீதியை மறுப்பதற்குச் சமம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வினீத் நாராயண் வழக்கு:
➤ ஊழல் வழக்குகளில்
அரசு அனுமதிக்கான காலக்கெடு அவசியம் என வலியுறுத்தப்பட்டது.

லஞ்ச வழக்குகளில் ஆதாரங்கள் லஞ்ச ஒழிப்பு வழக்குகளில்,
ரசாயணப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகள் ரசாயன சோதனை அறிக்கைகள், நேரடி பிடிப்பு சாட்சிகள்
போன்ற அறிவியல் மற்றும் வலுவான ஆதாரங்கள் இருப்பதால், அனுமதி மறுப்பது அரசுக்கு கடினமாகும்.


முடிவாக, புதிய சட்டத்திருத்தத்தின் மூலம், அனுமதி தாமதம் என்ற பாதுகாப்பு கவசம் நீக்கப்பட்டுள்ளது.120 நாட்களில் முடிவு இல்லையெனில் – அனுமதி தானாக வழங்கப்படும்.
இதனால், லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்புவது இனி கடினம் என்பதே சட்ட வல்லுநர்களின் கருத்து.

ஷேக் முகைதீன்

By TN NEWS