Sat. Dec 20th, 2025



டிசம்பர் 22 – தேசிய எதிர்ப்பு நாள் அறிவிப்பு

அகில இந்திய விவசாயி கிராமத் தொழிலாளர் நல சங்கம் (AVIKITHOSA) மாநில நிர்வாகக் குழு கூட்டம், மாநிலத் தலைவர் பாலசுந்தரம் தலைமையில் இணைய வழியாக நடைபெற்றது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை (MGNREGS) சிதைக்கும் வகையில், ஒன்றிய மோடி அரசு புதிய சட்ட முன்மொழிவுகளை கொண்டு வந்துள்ளதாக கூட்டத்தில் கடுமையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. திட்டத்தின் பெயரை மாற்றுவது, மாநில அரசுகளின் மீது நிதிச் சுமையை திணிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம், கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் மீது பெரும் தாக்குதல் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

125 நாள் வேலை என அறிவிக்கப்பட்டிருந்தாலும், நடைமுறையில் வேலை நாட்கள் குறைக்கப்பட்டு, வேலை பெறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக சுருக்கப்படுவதே ஒன்றிய அரசின் நோக்கம் என அகில இந்திய விவசாயி கிராமத் தொழிலாளர் நல சங்கம் குற்றம்சாட்டியது.

இந்த பேரழிவு மிக்க நடவடிக்கைகளை கண்டித்து, இதற்கு எதிராக போராட்டத்தை கட்டமைப்பது என கூட்டம் முடிவு செய்தது. அதன் முதல் கட்டமாக, வரும் டிசம்பர் 22-ஆம் தேதி “தேசிய எதிர்ப்பு நாள்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்று தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய மற்றும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதனைத் தொடர்ந்து, கிராமப்புற தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், சமூக வலைதளங்கள் மூலம் விரிவான பரப்புரை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.

வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்த வேண்டும், நாள் கூலியை ரூ.600 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் பரப்புரையின் முக்கிய அம்சங்களாக எடுத்துச் செல்லப்பட வேண்டும் என கூட்டம் வலியுறுத்தியது.

நான்கு தொழிலாளர் சட்டங்கள் மற்றும் வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் மூலம், நாட்டின் உழைக்கும் கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், இத்தகைய பாசிசத் தாக்குதல்களை முன்னெடுத்து வரும் மோடி அரசை மக்கள் மத்தியில் கூர்மையாக அம்பலப்படுத்த வேண்டும் எனவும் கூட்டம் தீர்மானித்தது.

ஊராட்சி மற்றும் ஒன்றிய அளவிலான முன்னணிகளை கூட்டி, போராட்டத் தயாரிப்புகளை தீவிரப்படுத்தி, அகில இந்திய விவசாயி கிராமத் தொழிலாளர் நல சங்கத்தை மீண்டும் செயலூக்கமிக்க அமைப்பாக மாற்ற வேண்டும் என மாநில நிர்வாகக் குழு முடிவு செய்தது.

தோழமையுடன்,
தோழர் என். குணசேகரன்
மாநில பொதுச் செயலாளர்
அகில இந்திய விவசாயி கிராமத் தொழிலாளர் நல சங்கம்

அமல்ராஜ்

தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்

By TN NEWS