கள்ளக்குறிச்சி மாவட்டம் – சங்கராபுரம் தாலுக்கா – பூட்டை ஊராட்சியில் கடும் சுகாதார அவலம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பூட்டை ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை, முறையான சீரமைப்பு இல்லாமல் ஊரின் ஏரிக்குள் அள்ளிக்கொண்டு வந்து கொட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஏரியில் ஏற்கனவே உள்ள பள்ளங்களில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்படுவதால், நீர்நிலையின் இயல்பு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏரிநீர் தான் அருகிலுள்ள செம்பராம்பட்டு கிராமத்தின் முக்கிய குடிநீர் ஆதாரம். மேலும், ஏரிக்குள் குடிநீர் கிணறும் இருப்பதால், குப்பை கழிவுகளால் குடிநீர் மாசுபடும் அபாயம் தீவிரமாகியுள்ளது. இதனால் தொற்று நோய்கள் பரவும் சூழ்நிலை உருவாகி வருவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய சட்டவிரோத குப்பை கொட்டலைத் தடுக்க ஊராட்சி மன்ற தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO), பொதுப்பணித்துறை மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் ஆகியோர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
குப்பைகளை உடனடியாக அகற்றி, ஏரியை சுத்தப்படுத்தி பாதுகாக்க வேண்டும்; குடிநீர் ஆதாரங்களை காப்பாற்ற அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.
V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி





