Sun. Mar 22nd, 2026

விழுப்புரம், ஜன.30
விழுப்புரம் நகரில் சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற திருமண விழாக்கள் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விழுப்புரம் புதிய பஸ் நிலையம் முதல் சோலை மஹால் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால், சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

புதிய பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் மூன்று திருமண மண்டபங்களில் ஒரே நேரத்தில் திருமண விழாக்கள் நடைபெற்றன. இதனால் விழாவில் பங்கேற்றவர்கள் தங்களது வாகனங்களை சாலையோரங்களிலும் பிரதான சாலையிலும் நிறுத்திவிட்டு சென்றனர். இதன் காரணமாக சாலையின் அகலம் குறைந்து, போக்குவரத்து முற்றிலும் முடங்கும் நிலை உருவானது.

காவல்துறை நடவடிக்கை இல்லை என்ற குற்றச்சாட்டு…?
போக்குவரத்து நெரிசல் பல மணி நேரம் நீடித்தபோதும், சம்பவ இடத்தில் போதிய போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். விழா நாட்களில் முன்கூட்டியே போக்குவரத்து மாற்றுத் திட்டம் அறிவிக்கப்படாததும், வாகன நிறுத்தத்திற்கு தனி ஏற்பாடுகள் செய்யப்படாததும் நெரிசலுக்குக் காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

தனியார் பாதுகாப்பு ஏற்பாடு கட்டாயமாக்க வேண்டும்…?
இத்தகைய விழா காலங்களில், சம்பந்தப்பட்ட திருமண மண்டபங்களே தனியார் பாதுகாப்பு அல்லது தற்காலிக போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியாளர்களை நியமிக்க வேண்டும். இதற்கான தெளிவான மாவட்ட காவல்துறை உத்தரவை வெளியிட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்காணிப்பு கேமராக்கள் பயனுள்ளதா?
நகரின் பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் இந்த நெரிசலை பதிவு செய்துள்ளதா? அவ்வாறு இருந்தால், அங்கிருந்து போக்குவரத்து காவலர்களுக்கு உடனடி தகவல் ஏன் தெரிவிக்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை:
எதிர்கால சுப முகூர்த்த தினங்கள் மற்றும் விழா காலங்களில்,

முன்கூட்டிய போக்குவரத்து மாற்றுத் திட்டம்,

திருமண மண்டபங்களுக்கு கட்டுப்பாடுகள்,

வாகன நிறுத்தத்திற்கு தனி இடங்கள்,

கூடுதல் போக்குவரத்து காவலர்கள் நியமனம்
ஆகிய நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி

By TN NEWS