Sat. Feb 14th, 2026

தமிழ்நாடு அரசு உயர்கல்வி மாணவர்களுக்கு பெரும் உதவி.

தமிழகத்தில் உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசின் “உலகம் உங்கள் கையில்” திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 20 லட்சம் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ள நிலையில், முதல் கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை கடந்த ஜனவரி 05, 2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

செஞ்சியில் நடைபெற்ற விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா…!

அந்த வகையில், பிப்ரவரி 12 (வியாழக்கிழமை) விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

84 மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

விழுப்புரம் – கள்ளக்குறிச்சி மாவட்ட திறன் மேம்பாட்டு கழகத்தின் உதவி இயக்குனரும், செஞ்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வருமான சிவ நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கே.எஸ். மஸ்தான், செஞ்சி சட்டமன்ற உறுப்பினர், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் செஞ்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் 54 மாணவர்கள், 30 மாணவிகள் என மொத்தம் 84 பேருக்கு

தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி,

“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் இலவச ஆங்கிலப் பயிற்சி புத்தகம், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

“தொழிற்கல்வியே வாழ்வாதாரத்தை உறுதி செய்யும்” – எம்.எல்.ஏ. மஸ்தான்

சிறப்புரையில் எம்.எல்.ஏ. கே.எஸ். மஸ்தான் பேசுகையில்,
“பல மாணவ, மாணவிகள் குடும்பச் சூழ்நிலை காரணமாக சுமைகளை சுமந்தபடியே கல்வி கற்கின்றனர். ஆனால், தொழிற்கல்வி கற்றால் தான் ஒருவர் தன் வாழ்வாதாரத்தை நிலைநாட்டிக் கொள்ள முடியும். யாரிடமும் கையேந்தாமல், எந்தச் சூழ்நிலையிலும் சொந்தக் காலில் நிற்கும் தன்னம்பிக்கை தொழிற்கல்வி மூலம் கிடைக்கும்” எனக் கூறினார்.

பெண் கல்வி – தமிழகத்தின் பெருமை:

மேலும் அவர் பேசுகையில்,
“உயர்கல்வியில் தமிழகத்தின் வளர்ச்சி 52 சதவீதமாக உள்ளது. பிற மாநிலங்களில் இது 28 முதல் 32 சதவீதம் மட்டுமே. அதிலும் பெருமைமிக்க விஷயம், உயர்கல்வியில் 48 சதவீதம் பெண்கள் இடம்பெற்றிருப்பது. பெரியார் கண்ட கனவும், டாக்டர் அம்பேத்கரின் விருப்பமும் பெண் கல்வியே. பெண்கள் தங்களுக்குள் இருக்கும் அடிமைத்தனத்தை உடைத்தால்தான் ‘என்னால் முடியும்’ என்ற தன்னம்பிக்கை உருவாகும்” எனத் தெரிவித்தார்.

பல்வேறு பிரதிநிதிகள் பங்கேற்பு:

இந்நிகழ்ச்சியில்,,
செஞ்சி ஒன்றியக் குழு பெருந்தலைவர் விஜயகுமார்,
மேல்மலையனூர் வட்டார கல்விக் குழு தலைவர் நெடுஞ்செழியன்,
செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்த்தியார் அலி,
மன்ற உறுப்பினர்கள் பொன்னம்பலம், சுமித்ரா சங்கர்,
தொழிற்பயிற்சி பயிற்றுநர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட முதன்மை செய்தியாளர் :
தமிழ். மதியழகன்

By TN NEWS