Wed. Feb 11th, 2026

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனிக்கவனம்.

புதிதாக பொறுப்பேற்ற வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் பேட்டி….!

வேலூர் – பிப்.10

வேலூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் தெரிவித்தார்.

புதிய நியமனம்:

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய மயில்வாகனன் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சேலம் மாநகர துணை கமிஷனராக பணியாற்றிய சிவராமன் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

வாழ்த்துக்கள்…..!

பொறுப்பேற்ற நிகழ்வில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சட்டம் – ஒழுங்குக்கு முன்னுரிமை:

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்பி சிவராமன்,
“சட்டம் ஒழுங்கை பராமரிப்பதுடன், குற்றங்களை தடுக்க முன்னுரிமை அளிக்கப்படும். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை கட்டுப்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்படும்” என தெரிவித்தார்.

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு:

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக புகார்கள் வந்தால், கைது செய்யக்கூடிய குற்றமாக இருந்தால் விசாரணை துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும் என்றும் அவர் கூறினார்.

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை:

போதைப்பொருட்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும். பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் வாங்கலில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

தேர்தல் முன்னெச்சரிக்கை:

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கடத்தலை தடுக்க மாவட்ட எல்லைகளில் நிரந்தர சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும். அதேபோல் தற்காலிக சோதனைச் சாவடிகளும் அமைக்கப்படும் என்றார்.

கனரக வாகனங்கள் தீவிர சோதனை:

லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக தகவல்கள் இருப்பதால், சோதனைச் சாவடிகளில் கனரக வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்படும். இதற்காக கூடுதல் போலீசார் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு அழைப்பு:

பொதுமக்கள் தங்களின் புகார்கள் மற்றும் விசாரணை தொடர்பான குறைகளை நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தெரிவிக்கலாம். மேலும் பொதுமக்கள் உடனடியாக புகார் அளிக்க வாட்ஸ் அப் எண் விரைவில் வழங்கப்படும் என அறிவித்தார்.

சட்டம் அனைவருக்கும் ஒன்று:

“எந்த புகார் வந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் அனைவருக்கும் ஒன்று; எந்தவித பாரபட்சமும் இன்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று எஸ்பி சிவராமன் வலியுறுத்தினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS