Fri. Feb 27th, 2026

சின்னமனூர் – தேனி மாவட்டம்.

சின்னமனூர் நகராட்சிப் பகுதிகளில் ஆங்காங்கே மலைபோல் தேங்கிக் கிடக்கும் குப்பை மேடுகளால், தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நகரின் பாதுகாப்பும், சுகாதார சூழலும் கேள்விக்குறியாகியுள்ளது.

குப்பை மேடுகள் – தெருநாய்களின் நிரந்தர புகலிடம்:

சீப்பாலகோட்டை சாலை, பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில், அரசை கிராம சாலை, அகமுடையார் மண்டபம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தினந்தோறும் சேரும் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் வாரக்கணக்கில் தேங்கி வருகின்றன.

இந்தக் குப்பை மேடுகளில் கொட்டப்படும் உணவுக் கழிவுகளை உண்பதற்காக, நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து தெருநாய்கள் இங்கு திரண்டு வருகின்றன. குப்பை மேடுகளைத் தங்களின் ‘சொந்த எல்லை’ எனக் கருதும் நாய்கள், அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் மீது ஆக்ரோஷமாக தாக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

அரசு மருத்துவமனை சாலை – அச்சத்தின் பாதை:

குறிப்பாக அரசு பொது மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால், நாய்களின் நடமாட்டம் எப்போதும் அதிகமாகவே உள்ளது.
நோயாளிகளுடன் வருபவர்கள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் நாய்களின் தாக்குதலுக்குப் பயந்து ஓட வேண்டிய அவல நிலை தொடர்கிறது.

குப்பைகளில் இருந்து வீசும் துர்நாற்றத்துடன், தெருநாய்களின் அச்சுறுத்தலும் சேர்ந்து, சின்னமனூர் நகரம் முழுவதும் பொதுமக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு:

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,

“குப்பைகளை தினமும் முறையாக அகற்றினாலே, நாய்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தடுக்க முடியும்.
ஆனால் நகராட்சி நிர்வாகம் குப்பை அகற்றுவதிலும் அலட்சியம் காட்டுகிறது.

பெருகி வரும் தெருநாய்களைக் கட்டுப்படுத்தவும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,”
என கடும் வேதனையுடன் குற்றம்சாட்டுகின்றனர்.

பொதுமக்களின் முக்கிய கோரிக்கைகள்:

நகரின் அனைத்து வார்டுகளிலும் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை தினந்தோறும் போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும்.

குப்பை மேடுகளைத் தஞ்சமடைந்துள்ள தெருநாய்களைப் பிடித்து, கருத்தடை மற்றும் தடுப்பூசி சிகிச்சை அளிக்க வேண்டும்.

தெருவிளக்குகள் எரியாத பகுதிகளில் நாய்களின் தாக்குதல் அதிகரிப்பதால், மின்விளக்கு வசதிகளை உடனடியாகச் சீரமைக்க வேண்டும்.

சின்னமனூர் மக்களின் உயிருக்கும், சுகாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் இந்தப் பிரச்சினைக்கு, மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகமும் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.

செய்தி தொகுப்பு :
அன்பு பிரகாஷ் முருகேசன்
தேனி மாவட்ட தலைமை செய்தியாளர்

By TN NEWS