Fri. Dec 19th, 2025

கள்ளக்குறிச்சி, டிசம்பர் 18:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்கு உட்பட்ட பூட்டை கிராமத்தில், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகள், ஆறு மாதங்களை கடந்தும் செயல்படாமல் இருப்பதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

பூட்டை கிராமத்தில் 15வது நிதிக் குழு மானியத்தின் கீழ் சுமார் 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஜல் ஜீவன் திட்டம் மூலம் 94 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்டன.
மாரியம்மன் கோவில் தெரு, அழகப்பா பள்ளிக்கு எதிரே உள்ள தெரு, மேட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு இந்த இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால், குழாய்கள் அமைக்கப்பட்டு அரை ஆண்டு கடந்த நிலையிலும், இதுநாள் வரையில் அந்த குடிநீர் குழாய்களில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குழாயை திறந்தால் வெறும் காற்று மட்டுமே வெளியேறுகிறது என்றும், குடிநீர் விநியோகம் முழுமையாக தடைபட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரும் தொகை செலவில் அமைக்கப்பட்ட ஜல் ஜீவன் திட்டம், மக்களுக்கு முழுமையான பலனை அளிக்காமல் இருப்பது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும், திட்டம் நடைமுறையில் செயல்படாத நிலையிலும் அதற்கான செலவினத் தொகைகள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறித்து மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

திட்டத்தை செயல்படுத்தும் முன் மற்றும் பின் முறையான ஆய்வு மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படாததே இந்த நிலைமைக்கு காரணம் எனவும், அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு வழிவகுத்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, தமிழ்நாடு அரசு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட 94 குடிநீர் குழாய் இணைப்புகளிலும் விரைந்து குடிநீர் விநியோகம் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

செய்தியாளர்:
V. ஜெய்சங்கர்
முதன்மை செய்தியாளர், கள்ளக்குறிச்சி
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி

By TN NEWS