Wed. Feb 4th, 2026


வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயக் குறை தீர்வு நாள் கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தாசில்தார் பழனி தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் திவியாபிரவணம் முன்னிலை வகித்தார். தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சிவகுமார் கலந்து கொண்டு வரவேற்புரை ஆற்றினார்.

விவசாயிகள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்:

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயப் பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மோர்தான அணையை சுற்றுலா தளமாக அறிவிக்க வேண்டும் என்றும், குடியாத்தம் மாவட்ட அரசு மருத்துவமனை திறக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து, கூடுதல் ஊழியர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள்:

குடியாத்தம் கால்நடை சந்தை விரைவில் தொடங்கப்பட வேண்டும்; வனவிலங்கு தொல்லையிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். பாலாற்றில் குடியாத்தம் – அகரம்சேரி – மேலாளத்தூர் சாலை இடையே பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்றும் கோரினர்.

கால்நடை மருத்துவம் – வேளாண்மை மேம்பாடு:

குடியாத்தம் கால்நடை மருத்துவமனையை தரம் உயர்த்தி, நிரந்தர மருத்துவர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; மாலை நேர சிகிச்சை வழங்கப்பட வேண்டும்; மருந்து மாத்திரைகள் அதிக அளவில் கையிருப்பில் வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், குடியாத்தம் பகுதியில் விவசாயக் கல்லூரி தொடங்க வேண்டும்; ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகம் கட்டும் பணி விரைவில் தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

உள்ளாட்சி மற்றும் பொதுநல கோரிக்கைகள்:

குடியாத்தம் பகுதியில் மாம்பழம் தொழிற்சாலை அமைக்க வேண்டும்; அக்ராவரம் ஊராட்சியில் சுகாதார நிலையத்தை மேம்படுத்தி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்; தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்; குரங்குகள் பிடிக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், தொகுப்பு வீடு பில் உடனடியாக வழங்க வேண்டும்; சாலை, குடிநீர், மின்விளக்கு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS