Mon. Jan 12th, 2026

Atrocities Act அடிப்படையில் விசாரணை நடத்த கோரிக்கை…!

மாவட்ட நிர்வாகம் & TNEPDS துறை பொறுப்பு ஏற்க வேண்டிய நிலை.

தென்காசி | ஜனவரி 11 :
தமிழக அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சமமாக வழங்க அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பு விநியோகத்தில், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா, பொய்கை ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளம்புளி கிராமத்தில் ஆதிதிராவிடர் (SC) குடும்பங்கள் மட்டும் புறக்கணிக்கப்பட்டதாக கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அப்பகுதியில் மகளிர் சுய உதவி குழு மூலம் நடத்தப்படும் நியாய விலைக் கடையில், 3-வது வார்டில் வசிக்கும் ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு டோக்கன் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மாநிலம் முழுவதும் ரூ.3,000 ரொக்கம், அரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் தொகுப்புகள் அனைவருக்கும் சமமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் விலக்கி செயல்பட்டது சமத்துவ உரிமைக்கும், சமூக நீதிக்கும் எதிரானது என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

டோக்கன் குறித்து நியாய விலைக் கடையில் கேள்வி எழுப்பியபோது,

“நாங்கள் கொடுக்கும் பொருட்கள் தேவைப்பட்டால் மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள்”

“அரசால் 80 சதவீத பொருட்களே வழங்கப்பட்டுள்ளதால் உங்களுக்கு வழங்க முடியாது”

என பதிலளிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கூறுகின்றன.
இந்த விளக்கங்கள் TNEPDS (தமிழ்நாடு பொது விநியோக அமைப்பு) விதிமுறைகளுக்கும், அரசு பொங்கல் தொகுப்பு வழிகாட்டுதல்களுக்கும் முற்றிலும் முரணானவை என சமூக நீதி ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

SC / ST உரிமை மீறலா?

சட்ட நிபுணர்கள் கூறுகையில்,
அரசு நலத்திட்டங்களில் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் சமூகத்தை திட்டமிட்டு புறக்கணிப்பது அல்லது உரிமை மறுப்பது,
SC / ST (அத்துமீறல் தடுப்பு) சட்டம் – 1989ன் கீழ் விசாரணைக்குரிய கடுமையான குற்றமாகும்.

“பொருள் இல்லை”, “ஒதுக்கீடு குறைவு” போன்ற காரணங்களை முன்வைத்து,
ஒரு சமூகத்தை மட்டும் விலக்க எந்த அதிகாரிக்கும் சட்ட உரிமை இல்லை என்றும்,
ஒதுக்கீடு மற்றும் விநியோகத்தில் தவறு இருந்தால், அதன் முழுப் பொறுப்பு
👉 நியாய விலைக் கடை நிர்வாகம்
👉 TNEPDS துறை அதிகாரிகள்
👉 மாவட்ட நிர்வாகம்
ஆகியோரையே சாரும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய கோரிக்கைகள்:

பாதிக்கப்பட்ட பொதுமக்கள்,

மாவட்ட ஆட்சியர் நேரடி விசாரணை நடத்த வேண்டும்

TNEPDS துறை விநியோக பதிவுகள், ஸ்டாக் நிலை, டோக்கன் பட்டியல் ஆகியவற்றை தணிக்கை செய்ய வேண்டும்

SC / ST உரிமை மீறல் உறுதி செய்யப்பட்டால், Atrocities Act அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால்,
SC / ST உரிமை பாதுகாப்பு போராட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு மற்றும் போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.

செய்தி : தமிழ்நாடு டுடே
தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்

J. அமல்ராஜ்.

By TN NEWS