Sun. Jan 11th, 2026

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள முக்கிய மேம்பாலம் தற்போது கடும் அபாய நிலையில் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த மேம்பாலம் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாகும். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தினசரி பல ஆயிரக்கணக்கான சிறிய, பெரிய வாகனங்கள் இப்பாலம் வழியாக சென்று வந்தன.

பாலத்தின் பழமையான நிலையை கருத்தில் கொண்டு, 2020-ஆம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறையினர் வாகனப் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர். சில மாதங்களில் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, மீண்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு இன்றுவரை பயன்பாட்டில் உள்ளது.

ஆனால், இந்த மேம்பாலத்தை தாங்கி நிற்கும் தூண்களின் அடிப்பகுதியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு தடுப்புக் கட்டைகள், பெஞ்சல் புயல், தொடர்ச்சியான வெள்ளப்பெருக்கு மற்றும் இந்த ஆண்டில் ஏற்பட்ட அதிகளவான நீர்வரத்து காரணமாக முற்றிலும் சேதமடைந்துள்ளன.

இதனால், பாலத்தின் தூண்கள் பலவீனமடைந்து, மேம்பாலத்தின் உறுதித் தன்மையே கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில், மேம்பாலம் மேலும் சேதமடைந்தால், ஆயிரக்கணக்கான வாகனங்களின் போக்குவரத்தும், பொதுமக்களின் அன்றாடச் செல்வாக்கும் முற்றிலுமாக துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக, மாவட்ட நிர்வாகமும் நெடுஞ்சாலைத்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மேம்பாலத்தின் சேதமடைந்த அஸ்திவாரத்தை சீரமைத்து, பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம்
V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி

By TN NEWS