Sun. Jan 11th, 2026

கள்ளக்குறிச்சி :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு வனத்துறை சார்பில் வணிக நோக்கில் அதிகளவில் யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்கப்பட்டு வரும் நிலையில், இம்மாவட்டத்திலேயே காகித தொழிற்சாலை (Paper Mill Unit) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் வலுப்பெற்று வருகிறது.

மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் ரிஷிவந்தியம், மாடாம்பூண்டி கூட்ரோடு, அத்தியூர், குமாரமங்கலம், வெள்ளையூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10,000 ஹெக்டேர் பரப்பளவில் யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இம்மரங்கள் அரசு வனத்துறையின் நேரடி கண்காணிப்பில் வளர்க்கப்படுவதுடன், காலம் வந்தபின் அறுவடை செய்யப்பட்டு காகித தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

🔴காகிதத் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருள் – யூகலிப்டஸ்:

யூகலிப்டஸ் மரத்தின் தண்டுகளில் உள்ள ‘செல்லுலோஸ்’ (Cellulose) இழைகள் காகித தயாரிப்பில் மிக முக்கிய மூலப்பொருளாகும். குறைந்த செலவில் அதிகளவு கூழ் கிடைப்பதும், குறுகிய காலத்திலேயே வேகமாக வளரும் தன்மை கொண்டதும் யூகலிப்டஸ் மரங்களை வனப்பகுதிகளில் வளர்க்க அரசுக்கு காரணமாக அமைந்துள்ளது.

நன்கு வளர்ந்த மரங்கள் அறுவடை செய்யப்பட்டு, கரூர் மாவட்டம் புகழூர் மற்றும் திருச்சி மாவட்டம் மொண்டிப்பட்டி பகுதிகளில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்திற்கு (TNPL) சொந்தமான தொழிற்சாலைகளுக்கு தனியார் ஒப்பந்த லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.

அதிகரிக்கும் போக்குவரத்து செலவு.

ஒரு லாரியில் சராசரியாக 23 முதல் 25 டன் எடை கொண்ட யூகலிப்டஸ் மரங்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன.
ஒரு டன் மரத்தை எடுத்துச் செல்ல ரூ.800 முதல் ரூ.900 வரை வாடகை செலவாகிறது. இதன் காரணமாக, போக்குவரத்து செலவு அரசுக்கும் நிறுவனத்திற்கும் கூடுதல் சுமையாக மாறியுள்ளது.

🔷கள்ளக்குறிச்சியில் தொழிற்சாலை – பொருளாதாரமும் வேலைவாய்ப்பும்:

இந்த நிலையில், அதிகளவு யூகலிப்டஸ் மரங்கள் விளையும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலேயே ஒரு காகித தொழிற்சாலை அலகு அமைக்கப்பட்டால்,

🔹போக்குவரத்து செலவு கணிசமாக குறையும்

🔹அரசின் வருவாய் மேலும் அதிகரிக்கும்

🔹மாவட்டத்தில் உள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு நேரடி      மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்

🔹மாவட்டத்தின் தொழில்துறை வளர்ச்சி வேகமடையும்

என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

🔴காகித உற்பத்திக்கு பயன்படும் சவுக்கு மரங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகளவில் அறுவடை செய்யப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் வடக்கு மற்றும் மத்திய தமிழ்நாட்டை இணைக்கும் தொழில்துறை மையமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

மாவட்டத்தின் இயற்கை வளங்களை கருத்தில் கொண்டு, மாநில அரசு மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (TNPL) இது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

V. ஜெய்சங்கர்
மக்கள் தொடர்பு அதிகாரி
தமிழ் நாடு டுடே
கள்ளக்குறிச்சி மாவட்டம்

By TN NEWS