கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியில் 12 பிப்ரவரி 2025 அன்று, “தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்” சார்பாக சிப்காட் நிலம் எடுப்பதைக் கைவிடக் கோரி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தலைமையில், சூளகிரி பேருந்து நிலையத்திலிருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக அணி திரண்டு, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவை வட்டாட்சியரிடம் விவசாயிகள் வழங்கினர்.
**முக்கிய கோரிக்கைகள்:**
1. நல்கான கொத்தபள்ளி கிராமத்தின் விவசாய நிலங்களை தொழிற்பேட்டை (சிப்காட்) அமைக்கக் கையகப்படுத்தும் முடிவைக் கைவிட வேண்டும்.
2. கெலவரப்பள்ளி இடதுபுற கால்வாய் மூலம் பாசனம் பெறும் விவசாய நிலத்தை சூளகிரி தொழிற்பேட்டைக்கு எடுக்கும் முடிவைக் கைவிட வேண்டும்.
3. கெலவரப்பள்ளி பாசன கால்வாய் திட்டத்திற்கு உட்பட்ட முப்போகம் விளைகின்ற விவசாய நிலப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
4. தென்பெண்ணை, ஆயக்கட்டு, விவசாய நிலங்களை தொழிற்பேட்டைக்கு எடுப்பதை ரத்து செய்ய வேண்டும்.
**பின்னணி:**
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, சூளகிரி, போச்சம்பள்ளி போன்ற பகுதிகளில் எட்டு சிப்காட்கள் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு சிப்காட் பகுதியிலும் 500 ஏக்கர் முதல் 2000 ஏக்கர் வரை நிலங்கள் கையகப்படுத்தப் பட்டுள்ளன. இந்த நிலங்களில் பெரும்பாலானவை விவசாயிகளுக்கு சொந்தமான விளைநிலங்கள். இந்த நிலங்கள் கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையிலிருந்து ஆண்டுதோறும் இரண்டு போக பாசனத்திற்காக நீர் பெறும் பகுதிகளாகும். இங்கு முள்ளங்கி, பீட்ரூட், முட்டைகோஸ், கேரட் போன்ற காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. மேலும், பசுமைக் குடில் மூலம் ரோஜா சாகுபடி செய்யப்பட்டு, கொய் மலர்கள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
**விவசாயிகளின் கவலை:**
சிப்காட் அமைக்க நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என்று கவலை தெரிவித்துள்ளனர். 2015 ஆம் ஆண்டில் சிப்காட்டுக்கு நிலம் எடுப்பது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணை காரணமாக, விவசாயிகள் அரசின் விவசாயம் சார்ந்த திட்டங்களில் பங்கு பெற முடியாமல் உள்ளனர். எனவே, உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என விவசாயிகள் கோருகின்றனர்.
**மக்கள் அதிகாரத்தின் ஆதரவு:**
மக்கள் அதிகாரம் சார்பாக விவசாயிகளின் கோரிக்கைகளை ஆதரித்து போராட்டத்தில் பங்கு கொண்டோம். விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தொடர்ந்து போராடுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
**தொடர்புக்கு:**
தோழர் ரஞ்சித்,
கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.
தொலைபேசி: 8754674757
PRESS & MEDIA
Tamilnadutoday.in/2024
TN
அரசுக்கு கோரிக்கை
சமூகம்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நகராட்சி நிர்வாகம் - மாவட்டம்
பத்திரிகை செய்தி / அறிக்கைகள்
மக்களின் குறை
மக்கள் குரல்
மாவட்ட செய்திகள், தமிழ்நாடு
விவசாயம்
கிருஷ்ணகிரி: சிப்காட் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்…?
