திருநெல்வேலி, தென்காசி அரசு மருத்துவமனைகளில் மனிதாபிமானக் கேள்வி….?
திருநெல்வேலி | ஜனவரி 9, 2026
திருநெல்வேலி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் (GHs) சிகிச்சைக்கு வரும் வெளி நோயாளிகள் (OP patients), குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள், சிகிச்சை பெறும் வரை நீண்ட நேரம் கால் கடுக்க நின்றே காத்திருக்க வைக்கப் படுவதாக கடுமையான புகார்கள் எழுந்துள்ளன.
பல அரசு மருத்துவமனைகளில் நாற்காலிகள் மற்றும் அமர்வதற்கான வசதிகள் இருந்தும், சில மருத்துவர்கள் நோயாளிகளை அமர அனுமதிப்பதில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதே மருத்துவர்கள் தனியார் கிளினிக்குகளில் சிகிச்சை அளிக்கும் போது நோயாளிகளுக்கு முறையாக அமர்வதற்கான வசதி வழங்குவதாகவும் கூறப்படுகிறது.
பத்திரிகை ஆய்வு – பல மருத்துவமனைகளின் உண்மை நிலை:
ஜனவரி 3, 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில்,
The New Indian Express செய்தியாளர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள,
தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை
ஆலங்குளம், வீரகேரளம்புதூர், ஆய்க்குடி
ஆகிய அரசு மருத்துவமனைகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, வெளி நோயாளிகள் அமர அனுமதிக்கப் படாமல், அருகிலேயே நாற்காலிகள் அல்லது மேஜைகள் இருந்தும் கால் கடுக்க நின்றே சிகிச்சை பெறும் நிலை காணப்பட்டது.
முதியவர் வாக்குமூலம்:
ஆய்க்குடி அரசு மருத்துவமனையில்,
73 வயதுடைய கோவிந்தன், மரத்தொழிலாளராக பணியாற்றியவர், கூறுகையில்:
“எனக்கு கடுமையான மூட்டு வலி (Osteoarthritis) உள்ளது. காலில் காயமும் இருக்கிறது. OP-யில் சிகிச்சை அளித்த மருத்துவர், நாற்காலி இருந்தும் என்னை அமர விடவில்லை.
ஆனால், அதே மருத்துவரின் தனியார் கிளினிக்கில் நான் சென்றபோது, சிகிச்சை முழுவதும் அமர வைத்தே பார்த்தார்,”
என்று தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பரவிய விவகாரம்:
ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவம் குறித்து சமூக வலைதளமான X (Twitter)-ல் பதிவு. செய்யப்பட்டதையடுத்து, இந்த விவகாரம் மருத்துவ உலகம் முழுவதும் விவாதப் பொருளாக மாறியது.
அந்த பதிவில்,
முதியவர்கள்,கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள்
நீண்ட வரிசையில் கால் கடுக்க நின்றே காத்திருக்க வைக்கப்படுகிறார்கள் என்றும்,அமர்வதற்கான வசதி முற்றிலும் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
மருத்துவ நிர்வாகத்தின் பதில்;
இதுகுறித்து,
திருநெல்வேலி – தென்காசி மண்டல இணை மருத்துவ இயக்குநர் (JD) டாக்டர் பிரேமலதா,
பத்திரிகையிடம் கூறியதாவது:
“என் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வெளி நோயாளிகளுக்கு கட்டாயமாக அமர்வதற்கான வசதி வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன். சில மருத்துவமனைகளில் நோயாளிகளை அமர அனுமதித்து சிகிச்சை அளிக்கும் புகைப்பட ஆதாரங்களும் உள்ளன,”
என்றார்.
ஆனால், இதனை மருத்துவ வட்டாரங்கள் மறுத்துள்ளன.
பல மருத்துவமனைகளில் JD அறிவுறுத்தலுக்குப் பிறகும், சில மருத்துவர்கள் நோயாளிகளை அமர அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு தொடர்கிறது.
வீரகேரளம்புதூர் மருத்துவமனை சம்பவம்:
வீரகேரளம்புதூர் அரசு மருத்துவமனையில்,
ஒரு பெண் மருத்துவர் முதிய நோயாளிகளைக் கூட அமர அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.
ஒரு நோயாளியை அமர சொல்லிய போது,
அவர்,
“நான் ஏற்கனவே நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருக்கிறேன். எனக்கு முன்னால் கடுமையான காயத்துடன் ஒருவர் நிற்கிறார்,” என்று கூறி அமர மறுத்த சம்பவமும் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் கோரிக்கை:
பல வெளிநோயாளிகள், குறிப்பாக முதிய பெண்கள், கூறுகையில்:
“சிகிச்சை பெறுவது ஒரு உரிமை…!
அதற்காக நாங்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்.
அமர்வதற்கான வசதி வழங்கப்படுவது மனிதாபிமான அடிப்படை தேவை,” என்று வலியுறுத்தினர்.
அரசு நடவடிக்கை வாக்குறுதி:
இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் பதிலளித்த கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் பி. செந்தில்குமார்,
“அனைத்து அரசு மருத்துவமனைகளிலும்,
வெளி நோயாளிகள் சிகிச்சை பெறும் போது கட்டாயமாக அமர அனுமதிக்க வேண்டும். இதற்கான தெளிவான உத்தரவுகள் வழங்கப்படும்,” என்று உறுதி அளித்துள்ளார்.
முடிவுரை:
திருநெல்வேலி – தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனைகளில்,‘சிகிச்சைக்கு முன் மனித மரியாதை’ என்ற அடிப்படை கேள்வி எழுந்துள்ளது.நாற்காலிகள் இருந்தும் நோயாளிகளை கால் கடுக்க நின்றே சிகிச்சை பெற வைப்பது,அரசு மருத்துவ சேவையின் மனித நேயத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
J. அமல்ராஜ்
தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்.
