Sat. Jan 10th, 2026

தர்மபுரி | ஜனவரி :
மகளிர் மற்றும் இளைஞர்களின் உடல், மன வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்குடன், தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் சமத்துவ விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்தப் போட்டிகளில் வீரர், வீராங்கனைகள், மாணவ–மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்கள், வரும் பொங்கல் திருவிழாவை “திராவிட பொங்கல்” பண்டிகையாக கொண்டாட வேண்டும் என்றும், அதனை முன்னிட்டு மாநிலம் முழுவதும் சாதி, மத, ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமத்துவ விளையாட்டுப் போட்டிகள் நடத்த வேண்டும் என்றும் கட்சி பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

அந்த அறிவுறுத்தலின் அடிப்படையில், தர்மபுரி மேற்கு மாவட்டம் முழுவதும், மகளிர் சக்தி, இளைஞர் திறன் மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

மகளிர் மேம்பாடு – சமூக சமத்துவத்தின் அடையாளம்.

பி.பழனியப்பன் தனது அறிக்கையில் கூறியதாவது:
மகளிரை ஒருங்கிணைத்து, அவர்களின் படைப்பாற்றல், கலாச்சார உணர்வு மற்றும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில்,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கோலப் போட்டிகள்,
சிறு சிறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

“சமத்துவம் பொங்கட்டும் – தமிழ்நாடு வெல்லட்டும்” என்ற வாசகத்துடன் திராவிட பொங்கல் கோலமிட்டு,
சாதி, மத பேதமற்ற சமூக ஒற்றுமையை பெண்கள் வழியாக வலுப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இளைஞர் மேம்பாடு – ஆரோக்கியமான தமிழ்நாட்டிற்கான அடித்தளம்.

இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வம், ஒழுக்கம், குழு உணர்வு மற்றும் தலைமைப் பண்புகளை வளர்க்கும் வகையில்,
வாலிபால், கிரிக்கெட், கபடி, ரிங் பால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இது,

போதைப்பொருள் மற்றும் தீய பழக்கங்களில் இருந்து இளைஞர்களை விலக்க, விளையாட்டின் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்க, கிராமப்புற இளைஞர்களின் மறைந்துள்ள திறமைகளை வெளிக்கொணர
முக்கிய பங்காற்றும் என அவர் தெரிவித்தார்.

போட்டிகள் நடைபெறும் இடங்கள்.

பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி:
பெரியாம்பட்டி, வெள்ளிச்சந்தை, மாரண்டஅள்ளி, சிக்கார் தனஹள்ளி, பாலக்கோடு, கடகத்தூர்.

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி:
வெங்கட்ட சமுத்திரம், பி.பள்ளிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, பொ.மல்லாபுரம், தென்கரைக்கோட்டை, கடத்தூர், எட்டி மரத்துப்பட்டி, புழுதிக்கரை, சோலைக்கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில்,

மொத்தம் 20 இடங்களில், தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் சமத்துவ விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு

இந்த விளையாட்டுப் போட்டிகளை அந்தந்த பகுதிகளில்
கழக ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சி கழக செயலாளர்கள் துவக்கி வைக்க வேண்டும் என்றும்,

மாநில, மாவட்ட நிர்வாகிகள்,
தலைமை செயற்குழு உறுப்பினர்கள்,
ஒன்றிய, பேரூர், கிளை, வார்டு நிர்வாகிகள்,
சார்பு அணி அமைப்பாளர்கள்,
உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு,

மகளிர், இளைஞர் மேம்பாட்டை அடையாளப்படுத்தும் திராவிட பொங்கலை சிறப்பாக நடத்த வேண்டும்
என பி.பழனியப்பன் அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

✍️ செய்தி : ராஜீவ் காந்தி

By TN NEWS