தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொ.மல்லாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பண்டாரசெட்டிபட்டி கிராமம், 6-வது வார்டு, திரு.வி.க தெருவில் உள்ள ஒரு பொது இடத்தில் நிழற்குடம் மற்றும் ஆர்.ஓ (RO) குடிநீர் அமைப்பு அமைக்க பொதுமக்கள் முயற்சி மேற்கொண்டுவரும் நிலையில், அந்த இடம் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அப்பகுதியில் வசிக்கும் அமுதா என்பவரின் கணவர் ராஜாக்கண்ணு மற்றும் அவர்களது மகன்கள் தனசேகரன் (41), ராஜநாகம் (37) ஆகியோர் பொது இடத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் 31/2A சர்வே எண்ணில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட 4 சென்ட் நிலமும், நத்தம் கிராமத்தில் 2 சென்ட் நிலமும், மேலும் சுமார் 3 ஏக்கர் விவசாய நிலமும் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு தனிப்பட்ட நிலங்கள் இருந்தும், தேவையில்லாமல் பொது இடத்தை ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆக்கிரமிப்பின் காரணமாக, வெயில் காலங்களிலும் மழைக்காலங்களிலும் ஊர் நுழைவாயிலில் பொதுமக்கள் நிற்கக்கூட இடமின்றி சிரமம் அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை அலுவலர், பொ.மல்லாபுரம் பேரூராட்சி செயலாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி, அந்த இடத்தை மக்கள் பயன்பாட்டிற்காக மீட்டுத் தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண்டல செய்தியாளர்:
D. ராஜீவ் காந்தி

