பொ.மல்லாபுரம் மக்கள் எதிர்பார்த்த மருத்துவ மேம்பாடு… 30 படுக்கைகள் கொண்ட புதிய சுகாதார நிலையத்திற்கு அரசின் ஒப்புதல்!
தருமபுரி மாவட்டத்தின் பொ. மல்லாபுரம்:
பெயருக்கு ஒரு சிறிய நகரம் தான். ஆனால் அதனைச் சுற்றியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களின் மருத்துவ வசதிகள் அனைத்தும் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையே சார்ந்து இருந்தன. உடனடி சிகிச்சை தேவைப்படும் நேரங்களில் பலர் 15–20 கிலோமீட்டர் தூரம் சென்று மட்டுமே மருத்துவ உதவி பெற வேண்டிய நிலை நீண்ட காலமாக நிலவி வந்தது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பொ. மல்லாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கைகள் கொண்ட, 24 மணி நேரமும் செயல்படும் மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாக உயர்த்தும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது இப்பகுதி மக்களுக்கு ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
மாற்றம் எதற்காக அவசியமானது?
பொ. மல்லாபுரம் சுகாதார நிலையத்தில் இதுவரை
அவசர சிகிச்சைக்கு தேவையான படுக்கைகள் குறைவு,
இரவு நேர சேவை வரம்பானது,சுற்றியுள்ள கிராம மக்களுக்கு ஒரே அரசு மருத்துவ அணுகுமுறை என பல தடைகள் இருந்தன.
திப்பிரெட்டிஅள்ளி, கொண்டகரஅள்ளி, வே.முத்தம்பட்டி, கோடுஅள்ளி, ரேகடஅள்ளி, வீராச்சியூர், ராமமூர்த்திநகர் போன்ற கிராமங்களின் மக்கள் தொகையைக் கொண்டு கணக்கிட்டால், 50,000-ஐ தாண்டும் மக்கள் இந்த மருத்துவ நிலையத்தை சார்ந்து வாழ்கின்றனர்.
கோரிக்கையிலிருந்து நடவடிக்கைக்கு, நிர்வாக முயற்சியின் பின்னணி:
இந்த மருத்துவ மேம்பாட்டுக்கான கோரிக்கை பல முறை முன்வைக்கப்பட்டிருந்தது. நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி பா. ஜெபசிங் தொடர்ந்து மனுக்கள், ஆவணங்கள், மக்கள் கணக்குகள் உள்ளிட்ட ஆதாரங்களை சமர்ப்பித்து வந்தார்.
ஆரம்பத்தில் மாவட்ட சுகாதார துறை :
“8 கி.மீ. சுற்றளவில் மற்றொரு மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை இருக்கக் கூடாது; மக்கள் தொகை 30,000-ஐ கடந்திருக்க வேண்டும்”என்ற நிபந்தனைகளை கூறி மறுத்தது.
ஆனால், ஜெபசிங் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மீண்டும் மனு கொடுத்து,
8 கி.மீ. சுற்றளவில் எந்த பெரிய அரசு மருத்துவமனையும் இல்லை. சுற்றியுள்ள கிராமங்களை சேர்த்து மக்கள் தொகை 50,000-ஐ தாண்டுகிறது என்று தெளிவான கணக்குகளை விளக்கினார்.
இந்த ஆவணங்களை பரிசீலித்த அரசு மற்றும் சுகாதார துறை, இப்பகுதியின் உண்மை நிலையை கவனித்து, இறுதியாக மேம்பாட்டிற்கு ஒப்புதல் அளித்தது.
புதிய மருத்துவ மேம்பாட்டின் எதிர்பார்க்கப்படும் நன்மைகள்;
1. இரவு நேர சிகிச்சை கிடைக்கும்:
24 மணி நேரமும் செயல்படும் மையம் என்பதால், அவசர நிலைகளில் அருகிலுள்ள மக்கள் தூரம் செல்ல வேண்டிய அவசியம் நீங்கும்.
2. 30 படுக்கைகள், அடிப்படை வசதிகள் மேம்பாடு:
படுக்கை வசதிகள் அதிகரிப்பதால், தற்போதுள்ள நோயாளிகள் நெரிசல் குறையும்.
3. சுற்றுப்புறத்தில் 50,000 மக்களுக்கு பயன்:
மருத்துவ சேவையை நம்பிக்கையுடன் பெறக்கூடிய நிலையில் மாற்றம் ஏற்படும்.
4. தாய்மை, குழந்தை பராமரிப்பு சேவைகள் மேம்பாடு:
பரிசோதனை, தடுப்பூசி, நீண்ட கால சிகிச்சை மேம்படுத்தப்படும்.
5. பகுதிசார் மருத்துவ வளர்ச்சிக்கு துவக்கம்:
பொ.மல்லாபுரத்தை மையமாக வைத்து புதிய மருத்துவ அணுகுமுறைகள் உருவாக வாய்ப்பு அதிகரிக்கும்.
ஒரு நிர்வாக முயற்சி…!ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்க்கை:
ஒரு மனு, ஒரு வலியுறுத்தல் என்பவை பலருக்கு ஒரு ஆவணமாகத் தோன்றலாம்.
ஆனால் பொ. மல்லாபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு,
இது வாழ்க்கை தரத்தில் மாற்றத்தை உண்டாக்கும் ஒரு முன்னேற்றம்.
காலக்கட்டங்களில் இம்மருத்துவ நிலையம் முழுமையாக வடிவமைக்கப்பட்டு செயல்பட்டால்,
இது தருமபுரி மாவட்டத்தின் சுகாதார வரைபடத்தில் முக்கிய இடத்தைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.
மண்டல செய்தியாளர்
ராஜீவ்காந்தி

