Mon. Dec 22nd, 2025

21.11.2025
சென்னை மாவட்டம் – கொளத்தூர் தொகுதி
சென்னை மாநகராட்சி அறிவித்துள்ள செல்லப்பிராணி உரிமம் பெறும் கடைசி தேதி நெருங்கி வருவதால், திரு.வி.க. நகர் செல்லப்பிராணி சிகிச்சை மையம் உள்ளிட்ட பல இடங்களில் இன்று அதிகாலை முதல் நீண்ட வரிசையில் செல்லப்பிராணி உரிமையாளர்கள் காத்திருக்கின்றனர்.

மாநகராட்சி அறிவிப்பின்படி, நவம்பர் 23-ஆம் தேதிக்குள், செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும்

மைக்ரோ சிப் பொருத்த வேண்டும்

பின்னர் உரிமம் பெற வேண்டும், இவற்றை மேற்கொள்ள தவறினால் ₹5,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 5 மணி முதலே நீண்ட வரிசை:

திரு.வி.க. நகர் சிகிச்சை மையத்தில் காலை 5 மணி முதலே பெரும்பாலான செல்லப்பிராணி உரிமையாளர்கள் வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்காக காத்திருந்தனர். சிகிச்சை மையத்தில் பணியாளர்கள் குறைவாக இருப்பது காரணமாக செயல்முறை மந்தமாக நடப்பதாக அதிகாரிகள் கூறினர்.

மேலும், சிலர் முககவசம் இல்லாமல் செல்லப்பிராணிகளை கொண்டு வந்ததால் அருகில் செல்லும் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுவதாகவும் கருத்துகள் எழுந்தன.

சிறப்பு முகாம்களில் இதுவரை…!

கடந்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் 7 இடங்களில் மாநகராட்சி சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
அதில், 2,552 செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி, 3,319 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. வரும் ஞாயிற்றுக்கிழமையும் இதேபோன்ற சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதுவும் கடைசி நாளாகும்.

உரிமையாளர்கள் கோரிக்கை:

செல்லப்பிராணி உரிமையாளர்கள் தெரிவித்தது:

இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால் பணிகளை முடிக்க முடியாமல் சிரமம், அனைத்து வார்டுகளிலும் சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்ய வேண்டும், கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்,மேலும் ஆன்லைனில் கட்டணம் ₹50 என கூறப்பட்ட நிலையில் ₹99 வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மொத்தத்தில்…

சென்னையில் செல்லப்பிராணி உரிமம் பெறுவதற்கான அவசர நிலை உருவாகியுள்ளது. வரிசை நீளம் அதிகரித்து வரும் நிலையில், கால அவகாசம் நீட்டிப்பு தொடர்பாக மாநகராட்சி எவ்வாறு நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது செல்லப்பிராணி உரிமையாளர்களிடையே கேள்வியாக உள்ளது.

தமிழ்நாடு டுடே
சென்னை மாவட்ட செய்தியாளர்
எம். யாசர் அலி

 

 

 

By TN NEWS