Mon. Jul 21st, 2025

தற்போதைய அரசியலில் தெற்கு மாநிலங்களின் நாடாளுமன்ற தொகுதியில் மறு கட்டமைப்பு என்ற போர்வையில் தென் மாநிலங்களின் அதிகார வரம்பை குறைக்கும் நோக்கில் ஒன்றிய அரசின் நடைமுறைகள் வருங்கால தென்னிந்தியாவின் வளர்ச்சி கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்பட அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளது.

இதற்கு எதிராக தென்னிந்திய அரசியல் சார்ந்த கட்சிகள் மட்டும் போராடுவது என்பதுடன் மக்கள் எழுச்சி மட்டுமே இதற்கு தீர்வாக அமையும் என்பது அரசியல் ஆளுமைகளின் கருத்துக்கள்.

தமிழ்நாட்டின் மக்களாட்சியை குறைக்கத் திட்டமிடும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் – தமிழ்நாடு உரிமைக்காக உருமாறும் அரசியல்!

சென்னை: தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளை 40 இலிருந்து 33 ஆக குறைக்கும் ஒன்றிய அரசின் முயற்சியை வன்மையாக எதிர்க்கும் வகையில், முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

வளர்ச்சியடைந்த மாநிலங்களை தண்டிக்க முடியாது என தமிழக அரசியல் கட்சிகள் ஒருமனதாக வலியுறுத்துகின்றன. மக்கள்தொகை கட்டுப்பாடு, கல்வி, மருத்துவம், தொழில் வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு சமூக மேம்பாட்டு முயற்சிகளின் பலனாக தமிழ்நாடு முன்னேறியுள்ளதை, தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) காரணமாக அரசியல் பங்கீட்டில் குறைவு செய்வது நீதியற்ற நடவடிக்கையாகும்.

1950, 60களில் உத்திரப்பிரதேசம், பீஹாரை விட பின்தங்கிய நிலையில் இருந்த தமிழ்நாடு, இன்று நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இதற்குக் காரணம், தமிழகத்தின் அரசியல் முனைப்பும், மக்களின் கடின உழைப்பும் ஆகும்.

இந்த நிலையில், “விட்டுக்கொடுங்கள், இல்லையெனில் உங்கள் அரசியல் பங்கீட்டை குறைத்துவிடுவோம்” எனும் பாரதிய ஜனதா அரசின் அணுகுமுறை, நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட மாநிலங்களை தண்டிப்பதற்கு சமம். இதன் மூலம் மக்கள்தொகை கட்டுப்பாட்டை பின்பற்றாத மாநிலங்களுக்கு கூடுதல் அரசியல் அதிகாரம் வழங்கப்படுவது, தவறான முன்னுதாரணமாக மாறும்.

தமிழகத்தின் நியாயமான உரிமையை பாதுகாக்க, அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து மத்திய அரசின் முடிவுக்கு எதிராக உறுதியாக நிற்க வேண்டும் என அரசியல் வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன.

தொகுப்பு. மு.சேக்முகைதீன் – தமிழ்நாடு டுடே.