Mon. Mar 2nd, 2026

மதுரை ரயில் நிலையத்தில் தேநீர் வழங்க தாமதமானதால், தேநீர் கடை ஊழியரை Railway Protection Force (RPF) பணியாளர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய பாதுகாப்புப் படையினரே, ஒரு சிறிய காரணத்திற்காக சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு சாமானிய தொழிலாளி மீது வன்முறை நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது.

சம்பவத்தன்று, ரயில் நிலைய வளாகத்தில் உள்ள தேநீர் கடையில் போலீசார் தேநீர் ஆர்டர் செய்ததாக கூறப்படுகிறது. கடையில் இருந்த கூட்ட நெரிசல் காரணமாக தேநீர் வழங்க சற்று தாமதமானது. இதனால் ஆத்திரமடைந்த RPF பணியாளர்கள், அங்கிருந்த தேநீர் மாஸ்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் அவரை சரமாரியாகத் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த ஊழியர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளில் பதிவாகியுள்ளது. வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. பணியில் இருக்கும்போது பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்புப் படையினர் இவ்வாறு நடந்துகொள்வது அதிகார துஷ்பிரயோகமாகவே பார்க்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தவறு செய்தவர்களுக்கு துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

சாமானிய மக்களின் உழைப்பையும் மரியாதையையும் மதிக்காத இதுபோன்ற செயல்கள் இனி நடைபெறாதவாறு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

✍🏻 ராமர்
திண்டுக்கல்

By TN NEWS