கோவை:
FAIRA (அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு) நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி, தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தமிழக பதிவுத்துறை தலைவர் (ஐஏஎஸ்) அவர்களுக்கு பொதுமக்கள் நலன் கருதி முக்கிய கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
கோவை மண்டலத்தின் முக்கிய அலுவலகங்களில் ஒன்றான வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகம் தற்போது மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் செயல்பட்டு வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கானோர் கிரையம், ஒப்பந்தம், தானம் உள்ளிட்ட ஆவணப் பதிவுகள் மற்றும் திருமணப் பதிவுகளுக்காக வருகை தருகின்றனர்.
மருதமலைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதாலும், விசேஷ நாட்களில் லட்சக்கணக்கானோர் திரளுவதாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பாதுகாப்பு காரணங்களால், வாகனங்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திலேயே தடுத்து நிறுத்தப்படுகின்றன. இதனால் ஆவணப் பதிவு செய்ய வரும் முதியோர், கர்ப்பிணிப் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
மேலும், சமீபத்தில் அமலுக்கு வந்த Registration TN Amendment Act, 2025 (34C) படி அசல் ஆவணங்கள்கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், நெரிசலான பகுதியில் அசல் ஆவணங்களும் பணத்துடனும் செல்வது பாதுகாப்பு அச்சத்தை உருவாக்குகிறது.
இதனால், பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் வடவள்ளி பேருந்து நிலையம் அல்லது பிரதான சாலைக்கு அருகில் அலுவலகத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் ஆ. ஹென்றி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
சுருக்கமான செய்தி:
மருதமலை அடிவாரத்தில் உள்ள வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய கோரிக்கை
கோவை: மருதமலை கோவில் அடிவாரத்தில் இயங்கி வரும் வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை பொதுமக்கள் நலன் கருதி மாற்ற வேண்டும் என FAIRA தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி, தமிழக பதிவுத்துறை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பக்தர்கள் திரளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், 2 கி.மீ நடைப்பயணம், அசல் ஆவணங்களுடன் செல்லும் பாதுகாப்பு அச்சம் போன்ற காரணங்களை முன்வைத்து, வடவள்ளி பேருந்து நிலையம் அல்லது பிரதான சாலைக்கு அருகே அலுவலகத்தை மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வி. ஜெய்சங்கர்
மக்கள் தொடர்பு அதிகாரி
தமிழ்நாடு டுடே
கள்ளக்குறிச்சி மாவட்டம்
