Sat. Feb 7th, 2026

புதிய பேருந்து நிறுத்தம் மற்றும் அலுவலகக் கட்டிடம் ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வடுகம்பாடி ஊராட்சிக்குட்பட்ட புளியம்பட்டியில், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் (2024–2025) கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிறுத்தப் பணியையும், SCPAR திட்டம் (2025–2026) கீழ் ரூ.568.23 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடப் பணியையும் ஆய்வு செய்தார்.

நீர்த்தேக்கத் தொட்டி, கலைஞர் கனவு இல்லம் பார்வை
மல்லாபுரம் ஊராட்சிக்குட்பட்ட நெல்லம்பறையில், கனிம வள நிதித் திட்டம் (2024–2025) கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினையும், கலைஞர் கனவு இல்லம் திட்டம் (2025–2026) கீழ் ரூ.3.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வீட்டினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சமுதாயக் கூடம் மற்றும் நியாய விலைக் கடை ஆய்வு
தொடர்ந்து, மல்லாபுரம் ஊராட்சியில் கனிம வள நிதித் திட்டம் (2024–2025) கீழ் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். அதன்பின், மல்லாபுரம் நியாய விலைக் கடையில் ரேசன் பொருட்களின் இருப்பு, விநியோகம் மற்றும் தரம் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

பள்ளி ஆய்வு மற்றும் மதிய உணவு தர பரிசோதனை
பால்வார்பட்டியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை, வருகைப் பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும், பள்ளி மதிய உணவு தயாரிக்கும் கூடத்தில் உணவின் தரம் குறித்து பார்வையிட்டு, தினமும் எத்தனை மாணவர்களுக்கு உணவு தயாரிக்கப்படுகிறது, எத்தனை பேர் பயன்பெறுகின்றனர் என்பதையும் கேட்டறிந்தார்.

100 நாள் வேலைத் திட்ட பணிகள் ஆய்வு
அதே பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (2025–2026) கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் சாலையோர கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் 100 நாள் வேலை திட்டம் பயனுள்ளதாக உள்ளதா, பணிகள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதையும் கேட்டறிந்தார்.

நமக்கு நாமே திட்டப் பணிகள் குறித்து அறிவுறுத்தல்
டி.கூடலூர் ஊராட்சியில் நமக்கு நாமே திட்டம் (2025–2026) கீழ் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மயானம் மற்றும் காத்திருப்போர் கூடம், மேலும் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் மற்றும் பூங்கா அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். மடையப்பன்நாயக்கன்பட்டியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் உணவுக் கூடப் பணிகளையும் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கூட்டுறவு சங்கம் மற்றும் கடனுதவி ஆய்வு
மடையப்பன்நாயக்கன்பட்டி நியாய விலைக் கடை மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், ரேசன் பொருட்கள் விநியோகம், கறவை மாடு கடன், தங்க நகை கடன் உள்ளிட்ட கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ள விவரங்களை பதிவேடுகளுடன் ஆய்வு செய்தார். தகுதியின் அடிப்படையில் பொதுமக்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட வேண்டும் என பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வில் கலந்து கொண்டோர்.
இந்த ஆய்வின் போது, குஜிலியம்பாறை வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம்

By TN NEWS