Sun. Mar 22nd, 2026

இந்து எழுச்சி முன்னணி கண்டன போஸ்டர்களால் பரபரப்பு.

சின்னமனூர்:
சின்னமனூர் நகரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் திருக்கோவில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தேரோட்டம் மற்றும் தெப்பத்திருவிழாவை மிக விமரிசையாக நடத்தி வருவது பல தசாப்தங்களாகக் கடைபிடிக்கப்பட்ட மரபாகும். இந்த விழாவைக் காண சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வது வழக்கம்.

நடப்பாண்டு தைப்பூசத் திருவிழா பணிகள் நடைபெற்று வந்த நிலையில், முக்கிய நிகழ்வான தெப்பத்திருவிழா திடீரென நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனால் உள்ளூர் மக்கள் மற்றும் ஆன்மிகப் பெரியோர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதனை கண்டித்து இந்து எழுச்சி முன்னணி (சின்னமனூர் நகர்) சார்பில் பேருந்து நிலையம், கோவில் வாசல், கடைவீதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

போஸ்டர்களில், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மற்றும் அறங்காவலர் குழு நிர்வாகிகள் உள்நோக்கத்துடன் செயல்பட்டு, பாரம்பரியமாக நடைபெறும் தெப்பத்திருவிழாவை முடக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், இந்துக்களின் வழிபாட்டு உரிமைகள் மற்றும் கோவில் சடங்குகளில் திராவிட மாடல் அரசு தலையிடுவதாக வன்மையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சிவன் சொத்து குலநாசம்”, “கோவில் மரபைத் தடுக்காதே” போன்ற வாசகங்கள் மூலம் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலங்காலமாக தடையின்றி நடைபெற்ற விழாவை நிர்வாகக் காரணங்களை முன்வைத்து நிறுத்துவது முறையல்ல என்றும், இது இறைநம்பிக்கை கொண்டவர்களின் மனதைப் புண்படுத்துவதாகவும் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த போஸ்டர் விவகாரத்தால் சின்னமனூர் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. நிலைமை மேலும் தீவிரமடைவதற்குள், அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு தெப்பத்திருவிழாவை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தி தொகுப்பு:
அன்புபிரகாஷ் முருகேசன்
தேனி மாவட்ட தலைமை செய்தியாளர்

By TN NEWS