Wed. Feb 4th, 2026

பள்ளிகொண்டா, பிப்ரவரி 1 :
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

வேலூர் மாவட்டம், வேலூரில் அண்ணா கலையரங்கம் அருகே தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் கலந்து கொண்டார். பொதுக்கூட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“சமத்துவம் ஏற்பட வேண்டும் என்பதற்காக மாநிலம் முழுவதும் மாநாடுகள் மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்தி, அனைத்து சாதி மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வருகிறோம். முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து எதிர்க் கட்சியையும் மத்திய அரசையும் குறை கூறி வருகிறார். மத்திய அரசு 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தியுள்ளது.

எஸ்.சி. மக்களுக்கு துரோகம் செய்தவர் கலைஞர். அதனால்தான் அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதற்கு அவருக்கு யார் அதிகாரம் தந்தது? எல்லா சமுதாயத்திற்கும் இடஒதுக்கீடு வேண்டும்.

‘இரட்டை எஞ்சின்’ என பிரதமர் நரேந்திர மோடி மேடையில் பேசியதை முதல்வர் தரம் தாழ்ந்து விமர்சிப்பது சரியல்ல. இதுகுறித்து போஸ்டர்கள் ஒட்டப்படுவது கண்டனத்திற்குரியது. மேலும் மத்திய அரசிடம் தேவையான நிதியை கேட்டு பெறாமல், தமிழக அரசு முரண்டு பிடிக்கிறது; ஆனால் எல்லாவற்றிற்கும் மத்திய அரசையே குறை கூறுகிறது.

தேமுதிக யாருடன் கூட்டணி அமைப்பது என்பது அவர்களது முடிவு. பாஜக யாரையும் அழுத்தம் கொடுத்து கூட்டணியில் சேர்க்கவில்லை. சோழ மன்னர்கள் குறித்து திருமாவளவன் பேசியது அவரது தனிப்பட்ட கருத்தாக இருந்தாலும், அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மன்னர்கள் தமிழ் கலாச்சாரத்தை அழித்தார்கள் என கூறுவது அரசியல் லாபத்திற்காகவும் விளம்பரத்திற்காகவும் பேசுவது” என்றார்.

இதற்கு முன்பாக பள்ளிகொண்டா பகுதியில் மாவட்ட செயலாளர் குணசீலன், மாவட்ட இளைஞரணி தலைவர் லாவண்யா தினேஷ் ஆகியோர் தலைமையில் ஜான் பாண்டியனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS