Sat. Jan 10th, 2026

சென்னை:

திருப்பரங்குன்றம் மலையில் நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய நடைமுறையை மாற்றி, மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்கா அருகே அமைந்த நில அளவைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு, திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் மற்றும் தர்கா நிர்வாகம் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீடுகளை தள்ளுபடி செய்த நீதிமன்றம், தனி நீதிபதி உத்தரவின்படி அத்தூணில் தீபம் ஏற்றிட கோயில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தீர்ப்பு பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“சட்டம்-ஒழுங்கு மற்றும் பொது அமைதியை காரணமாகக் கொண்டு கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு தடை விதிக்க முடியாது என்ற நீதிமன்றக் கருத்து, அரசின் நியாயமான அச்சங்களை முற்றிலும் புறக்கணிப்பதாக உள்ளது. சட்டம்-ஒழுங்கை பேணிக் காப்பது அரசின் முதன்மையான பொறுப்பாகும் என்பதை நீதிமன்றம் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நூற்றாண்டுகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் வழக்கத்துக்கு மாறாக புதிய நடைமுறையை அமல்படுத்துவது சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அபாயத்தை ஏற்படுத்தும். அது சமூக அமைதிக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்பதே அரசின் உறுதியான நிலைப்பாடு” எனத் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவுகள் சமய நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையில் அமைய வேண்டுமே தவிர, எக்காரணம் கொண்டும் அதற்கு எதிராக அமையக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் கேட்டுக்கொண்டுள்ளதாக நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

அமல்ராஜ்
தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்

By TN NEWS