Fri. Dec 19th, 2025

குடியாத்தம், டிசம்பர் 17 :

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த போடி பேட்டை பகுதியில் உள்ள சிவூர் ஊராட்சி, லட்சுமி கார்டன் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக மோர்தனா அணை கால்வாயிலிருந்து வெளியேறும் நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து தேங்கி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நீர்த்தேக்கம் நீண்ட நாட்களாக அகற்றப்படாததால், அந்தப் பகுதியில் பாசி படிந்து துர்நாற்றம் வீசுவதுடன், சாலையில் வழுக்கல் ஏற்பட்டு பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், நகராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறும் பொதுமக்கள், தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி இன்று மாலை சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும், குடியாத்தம் வட்டாட்சியர் கே. பழனி, நகர காவல் ஆய்வாளர் ருக்மாங்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தேங்கி உள்ள நீரை அகற்ற உரிய நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில், பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால் குறுகிய நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் : கே.வி.ராஜேந்திரன்

By TN NEWS