
சென்னை, ராயபுரம்
13.12.2025
தமிழக அரசு வழங்கிய “நிரந்தர தூய்மை பணியாளர்கள்” என்ற வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படாததையும், தூய்மை பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் முடிவை எதிர்த்தும், சென்னை மாநகரில் கடந்த சில நாட்களாக தூய்மை பணியாளர்கள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று காலை மெரினா கடற்கரை அருகே தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மண்டலம் 4 மற்றும் மண்டலம் 6 ஆகிய பகுதிகளில் பணிபுரியும் ஏராளமான தூய்மை பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தை கலைக்க காவல்துறையினர் முயன்ற போது, காவல்துறையினருக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை கைது செய்து, வாகனங்களில் ஏற்றி ராயபுரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இரவு நேரம் ஆனபோதும்,
“எங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்”
என தெரிவித்த தூய்மை பணியாளர்கள், மீண்டும் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
இதையடுத்து காவல்துறையினர் மீண்டும் அவர்களை கைது செய்து, வாகனங்களில் ஏற்றி போராட்டத்தை கலைக்க முயற்சி செய்தனர்.
இந்த சம்பவம் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு டுடே
சென்னை செய்தியாளர் : எம். யாசர் அலி
ஒளிப்பதிவாளர் : ராஜேஷ்
