Tue. Dec 16th, 2025

தர்மபுரி, டிசம்பர் 13

தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் அவர்களின் மகன் எழில்மறவன் – கிருத்திகா ஆகியோரது திருமண விழா, பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோளையானூரில் உள்ள ஆண்டாள் நகர் கலைஞர் திடலில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த திருமண விழாவை திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தி உரையாற்றுகிறார்.

இவ்விழாவில் தமிழக துணை முதலமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.
திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சருமான எ.வ. வேலு வரவேற்று பேசுகிறார்.

மேலும் அமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் பழனியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“எனது மகன் திருமண விழாவை நடத்தி வைக்க தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தரும் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில், கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், சார்பு அணியினர், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டும்”
என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த விழாவை முன்னிட்டு, தர்மபுரி மாவட்ட எல்லையிலிருந்து திருமண விழா நடைபெறும் திடல் வரை, சாலையின் இருபுறங்களிலும் திமுக கொடிகள், வரவேற்பு பேனர்கள் அமைக்கப்பட்டு வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மண்டல செய்தியாளர்
ராஜீவ் காந்தி


By TN NEWS