Tue. Dec 16th, 2025

 

யார் பொறுப்பு….?

39 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி…! ஆனால் வாழ்க்கை திரும்பாமல் போன மனிதனின் கதை…?

ரூ.100 லஞ்சக் குற்றச்சாட்டில் வாழ்நாள் சேதமடைந்த ஜாகேஷ்வர் பிரசாத் அவதியாவின் வேதனையான பயணம்…?

ராய்ப்பூர் (சத்தீஸ்கர்):
ராய்ப்பூரின் அவதியா பாராவின் குறுகிய தெருவில் உள்ள பழைய, அமைதியான வீடு, அதில் வாழ்ந்து வரும் 84 வயதான ஜாகேஷ்வர் பிரசாத் அவதியாவின் வாழ்க்கை, இந்திய நீதித்துறை தாமதத்தின் மிகத் துயரமான அடையாளமாக மாறியுள்ளது.

1986-ஆம் ஆண்டு ₹100 லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட அவர், 39 ஆண்டுகளுக்குப் பிறகு தான் முழுமையாக நிரபராதி என உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார்.
ஆனால்?


அந்த 39 ஆண்டுகளில் அவரது மனைவி இறந்துவிட்டார், குழந்தைகளின் கல்வி நஷ்டமடைந்தது, வேலை போய்விட்டது, மரியாதை முழுமையாக அழிந்தது.

“மனைவி இல்லை… மரியாதை இல்லை… என் வாழ்க்கையே இல்லை. இப்போது இந்த நீதிக்கு என்ன அர்த்தம்?” அவதியா வலியோடு கேட்கிறார்.

லஞ்சம் வாங்க மறுத்த நாள்… வாழ்க்கையே கருகிவிட்டது…!

ஜாகேஷ்வர் பிரசாத், அப்போது மத்தியப் பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகத்தில் எழுத்தராக இருந்தார்.
ஒரு ஊழியர், 20 ரூபாய் லஞ்சம் கொடுத்து வேலை சீக்கிரம் செய்வதற்குச் சொன்னார். அவதியா அதை மறுத்து, அவரையே கண்டித்தார்.

அந்த மறுப்பு…?
அவரது வாழ்க்கையில் மூச்சுத்திணறும் தண்டனையின் தொடக்கமாக மாறிப்போனது. மூன்று நாட்களுக்கு பிறகு, அவதியா அலுவலகத்திலிருந்து வெளியேறும் போது, அந்த ஊழியர் அவரின் சட்டை பாக்கெட்டில் எதையோ நுழைத்தார்.
அதற்குள் “விஜிலென்ஸ்” அதிகாரிகள் வந்து, அவரை 100 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கைது செய்தனர்.

இடைநீக்கம் — மாற்றம் — வறுமை — குடும்பத்திற்கும் தண்டனை:
1988ல் வழக்கு பதிவு செய்யப்பட்டதும்:
அவர் உடனே இடைநீக்கம், 6 ஆண்டுகள் வேலை நிறுத்தம்.

அதன்பின் ரேவா மாவட்டத்துக்கு தூரமான இடமாற்றம்,
பாதி சம்பளம் ரூ.2000-க்கும் குறைவு, குடும்பத்தார் ராய்ப்பூரில், அவர் ரேவாவில் தனியாக குழந்தைகள் பள்ளியில் இருந்து கட்டணம் இல்லாமல் துரத்தப்பட்ட நாட்கள், உறவினர்கள் கதவுகள் மூடிய நாட்கள்,

“என் மனைவி மன உளைச்சலால் மரித்துவிட்டாள். இறுதிச் சடங்கு செய்ய மூன்று ஆயிரம் ரூபாய் கூட எனக்கு இல்லையே… நண்பன் ஒருவர் கொடுத்தால்தான் சடங்கு செய்ய முடிந்தது”  கண்களில் நீர் மல்கி கூறுகிறார் அவதியா.

2004… குற்றவாளி என தீர்ப்பு, 1 ஆண்டு சிறை…?

அனைத்து சாட்சிகளும் வாக்குமூலத்தைத் திரும்பப் பெற்றிருந்த போதிலும், விசாரணை நீதிமன்றம் அவருக்கு:
1 ஆண்டு சிறைத்தண்டனை, ₹1,000 அபராதம் விதித்தது.

அடுத்த 20 ஆண்டுகள்…
அவர் உயர் நீதிமன்றத்தின் கதவையே தட்டித் தட்டித் தன் முதுமையை செலவழித்தார். 2025… இறுதியில் நீதி கிடைத்தது
உயர் நீதிமன்றம் கூறியது மிகத் தெளிவாக:

“ஜாகேஷ்வர் பிரசாத் அவதியா — நிரபராதி.”

ஆனால்? மனைவியை இழந்த துயரம், குழந்தைகளின் இழந்த கல்வி, நொறுங்கிய மரியாதை, 14,000 நாட்கள் “மாயச் சிறை” போய் விட்ட இளமை,

இதில் எதையும் திரும்பக்கொடுக்க முடியுமா?

“நீதிதான் கிடைத்தது… ஆனால் வாழ்க்கை போய்விட்டது.
மரியாதையும் திரும்பவில்லை. வீட்டில் வெறும் சுவர்கள் மட்டுமே மீதம்.”

நீதி தாமதமாகும்போது— அது மறுக்கப்பட்ட நீதி…?

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பிரியங்கா சுக்லா கூறுகிறார்:

“அவர் இழப்பீடு கேட்கலாம். ஆனால் எந்த இழப்பீடும் அவரது மனைவியையும், போய்விட்ட வாழ்க்கையையும் திரும்பக் கொடுக்க முடியாது.”

இந்த வழக்கு சத்தீஸ்கர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள ஆயிரக்கணக்கான பழைய வழக்குகளின் துயரமான ஒரு உதாரணம் மட்டுமே.

இப்போது அவதியாவுக்கு வேண்டியது… நீதி அல்ல, ஓய்வு.

“எனக்கு இனி நீதியே வேண்டாம். குறைந்தபட்சம் என் ஓய்வூதியம் கிடைத்தாலே போதும்.
வாழ்க்கை முழுவதும் உழைத்த என் கைகள் இனி யாரிடமும் கை நீட்ட வேண்டாம் என்பதற்கான நிம்மதி வேண்டும்” என்று சோகமாக விவரித்தார் அவதியா.

தமிழாக்கம் & செய்தி வடிவமைப்பு: ஷேக் முகைதீன்

By TN NEWS