22.11.2025 – குடியாத்தம்
குடியாத்தம் அருகே மோடிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட கொட்டமிட்டா கிராமத்தில் பொதுவழி தார் சாலையில் ஆக்கிரமிப்பு மீண்டும் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் புகார் அளித்ததை அடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர்.
பொதுமக்களின் புகார் மனு:
கிராமத்தைச் சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் மற்றும் பலரும் குடியாத்தம்–காட்பாடி சாலையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அவர்களது புகாரில் கூறப்பட்டிருப்பதாவது:
ரகுபதி என்ற நபர்,பொதுவழி தார் சாலையில் 4ஆண்டுகளுக்கு முன்பு காம்பவுண்ட் அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தார்.
பின்னர் தாசில்தார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை செய்து, அது பொதுசாலை என உறுதி செய்து, காம்பவுண்ட் அகற்றப்பட்டது. எனினும், தற்போது மீண்டும் அனுமதியின்றி, அதே தார் சாலையில் புதிய காம்பவுண்டை கட்டியுள்ளார்.
இந்த ஆக்கிரமிப்பு காரணமாக, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சந்திக்கும் சிரமங்கள்:
கிராம மக்கள் சாலையில் சீராக சென்று வர முடியாத நிலை
டிராக்டர், லாரி, இருசக்கர வாகனங்களுக்கு தடைகள்
வெங்கடகிருஷ்ணன் வீட்டு முன்பு சாலை மிகவும் குறுகியதாகி, குளியலறை மற்றும் கழிவறை அருகில் வாகனங்கள் உரசி செல்வது குடும்பத்தினருக்கு பெரும் பிரச்சினை ஏற்படுத்துவது என பொதுமக்கள் தெரிவித்து, காம்பவுண்டை அகற்றி பொதுசாலை சீராக்க நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.
புகாரை தொடர்ந்து, அதிகாரிகள் நேரில் ஆய்வு:
ஒன்றிய குழுத் தலைவர் சத்யானந்தம் உத்தரவின் பேரில், வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா விசாரணை மேற்கொண்டு வருகிறார். கிராம ஊராட்சிகள் பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், இன்று நேரில் சென்று ஆக்கிரமிப்பு நிலையைப் பார்வையிட்டார்.
ஊராட்சி மன்றத் தலைவர் லாவண்யா ஜெயபிரகாஷ் ஆய்வுப் பணிகளை கண்காணித்து வருகிறார். அரசு துறையினர் மேற்கொள்ளும் விசாரணையின் அடிப்படையில், பொதுவழி மீட்பு தொடர்பான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
தாலுக்கா செய்தி
செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்
