வேலூர் மாநகராட்சி 31 வது வார்டு, முள்ளிபாளையம், கோரிமேடு பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறை தற்போது சிதிலமடைந்து பயன்பாடின்றி உள்ளது. தண்ணீர் வசதி இல்லாமலும், துர்நாற்றத்துடன் காணப்படுவதால், மக்கள் திறந்த வெளியில் கழிப்பதை வழக்கமாக்கியுள்ளனர். இதனால் குறிப்பாக பெண்கள் பெரும் தர்மசங்கடத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் அ.முன்னா அவர்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், இப்பகுதி மாநகராட்சி மேயர் சுஜாதா அவர்களின் வார்டாக இருந்தும் பிரச்சனை தீர்க்கப்படாதது வருத்தமளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
சுகாதார சீர்கேடும் தொற்று நோய் அபாயமும் அதிகரிக்கும் நிலையில், மாநகராட்சி உடனடியாக பழைய கழிப்பறையை இடித்து, புதிய அடிப்படை வசதிகளுடன் கூடிய பொதுக் கழிப்பறை அமைக்க வேண்டும் என முள்ளிபாளையம், கோரிமேடு பகுதி மக்கள் சார்பில் தமிழ்நாடு டுடே செய்திகளுக்காக அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சேக் முகைதீன்
இணை ஆசிரியர்
