Wed. Feb 4th, 2026

குடியாத்தம் – ஜனவரி 28

வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருந்து கே.வி.குப்பம் வழியாக குடியாத்தம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படும் இளைஞரை, பேருந்தில் இருந்த பொதுமக்கள் பிடித்து தாக்கி, பின்னர் காவல் துறையிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை (27.01.2026) நடைபெற்ற இந்த சம்பவத்தில், குறித்த கல்லூரி மாணவி பேருந்தில் தூங்கிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அச்சமயம் கே.வி.குப்பம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து குடியாத்தம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர் பேருந்தில் ஏறி, மாணவியருகே அமர்ந்துள்ளார். பின்னர் அவர் திடீரென மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அலறி கூச்சலிட்டதையடுத்து, பேருந்தில் பயணித்த சக பயணிகள் உடனடியாக தலையிட்டு, அந்த இளைஞரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து பேருந்து குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தை அடைந்ததும், பிடிபட்ட இளைஞரை குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


செய்தியாளர் :
கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுக்கா




By TN NEWS