Sat. Jan 10th, 2026

கள்ளக்குறிச்சி, ஜனவரி 01

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகரில், ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்ட கல்வெர்ட் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளில், தமிழ்நாடு பொதுப்பணித்துறை (PWD) தொழில்நுட்ப விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

காமராஜ் நகரில் உள்ள கழிவுநீர் வடிகால் வாய்க்காலின் மீது புதிதாக கல்வெர்ட் அமைத்து, அதன்மேல் சிமெண்ட் சாலை அமைக்க கடந்த ஆண்டு ஊராட்சி நிர்வாகம் தீர்மானித்தது. இதற்காக,
கல்வெர்ட் அமைப்பதற்கு ரூ.1.82 லட்சமும்,
சிமெண்ட் சாலை அமைப்பதற்கு ரூ.2.65 லட்சமும்
ஊராட்சி பொது நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டது.

PWD விதிமுறைகளுக்கு எதிரான பணிகள்?

PWD தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி,

கல்வெர்ட் அமைக்கும் போது புதிய RCC / கான்கிரீட் சுவர் (side walls & abutments) கட்டாயமாக அமைக்கப்பட வேண்டும்.

பழைய, பலவீனமடைந்த சுவரின் மீது நேரடியாக சிலாப் அமைப்பது பாதுகாப்பு விதிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது என பொறியியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், மூங்கில்துறைப்பட்டு பகுதியில், புதிய சுவர் எழுப்பப்படாமல், ஏற்கனவே இருந்த பழைய கல்வெர்ட் சுவரின் மீது சிமெண்ட் சிலாப் மட்டும் அமைத்து கல்வெர்ட் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது எதிர்காலத்தில் சுவர் இடிந்து விழும் அபாயத்தையும், கழிவுநீர் அடைப்பு பிரச்சினையையும் உருவாக்கும் நிலை என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

சாலை உயரத்தில் குறைப்பு – நிதி முறைகேடு சந்தேகம்…?

மேலும், PWD சாலை அமைப்பு விதிகளின்படி,

குடியிருப்பு பகுதிகளில் சிமெண்ட் சாலை குறைந்தபட்சம் 7 இன்ச் தடிப்பில் அமைக்கப்பட வேண்டும்.

ஆனால், இப்பகுதியில் அமைக்கப்பட்ட சாலை வெறும் 5 இன்ச் உயரத்தில் மட்டுமே இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தப்பட்டதா, அல்லது அளவுக் குறைப்பு மூலம் நிதி முறைகேடு நடந்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஊராட்சி நிர்வாகத்தின் பொறுப்புணர்வு கேள்விக்குறி…?

பொது நிதி செலவிடப்பட்ட பணிகளில்,

திட்ட மதிப்பீடு (Estimate)

அளவுப்புத்தகம் (MB – Measurement Book)

பணித்தர சான்று (Quality Certificate)
ஆகியவை முறையாக பராமரிக்கப்பட்டதா என்பதையும் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விசாரணை நடத்த கோரிக்கை:

PWD பொறியாளர்கள் மூலம் தொழில்நுட்ப ஆய்வு நடத்தி,

விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால்….?

பொறுப்புள்ள ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது
ஒழுங்கு நடவடிக்கை மற்றும் நிதி மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி

By TN NEWS