‘களத்தைத் தயார் செய்வோம்! 2026-இல் வெல்வோம்!’ என்ற முழக்கத்துடன், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் தழுவிய அளவில் எஸ்டிபிஐ கட்சியின் பூத்-வாரியான கட்டமைப்பை பலப்படுத்தும் பணிகள் வேகமெடுத்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. திட்டமிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமனம் நிறைவடைந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் பூத் பொறுப்பாளர்கள் மற்றும் பூத் கமிட்டி முகவர்கள் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, இன்று (ஜனவரி 01) நெல்லையில் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டப் பூத் கமிட்டி மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது.
நெல்லை கொக்கிரக்குளத்தில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மண்டலத் தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், நெல்லை புறநகர் மாவட்டத் தலைவர் சிராஜ் வரவேற்புரையாற்றினார். மாவட்டப் பொதுச்செயலாளர் களந்தை மீராசா தொகுப்புரையாற்ற, மாநகர் மாவட்டத் தலைவர் பீர் மஸ்தான் தொடக்கவுரை நிகழ்த்தினார். மாநகர் மாவட்டப் பொதுச்செயலாளர் அன்வர்ஷா நன்றியுரை வழங்கினார்.
மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் பேருரையாற்றினார். மேலும், சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ஹமீது, பொதுச்செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அகமது நவவி மற்றும் மகளிரணி மாநில செயற்குழு உறுப்பினர் ஜன்னத் ஆலிமா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இம்மாநாட்டில் நெல்லை மாநகர் மாவட்டத் துணைத் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, மாவட்டச் செயலாளர் அலாவுதீன், பேட்டை முஸ்தபா, மாவட்டப் பொருளாளர் இம்ரான், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரியாஸ் அகமது, சேக் அப்துல்லாஹ், சேக் தாவூது, இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதேபோல், நெல்லை புறநகர் மாவட்டத் துணைத் தலைவர் கல்லிடைக்குறிச்சி சுலைமான், மாவட்ட அமைப்புச் செயலாளர் முல்லை மஜீத், மாவட்டச் செயலாளர்கள் அம்பை ஜலில், தவ்ஃபிக், மாவட்டப் பொருளாளர் இளையராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சஃபி மற்றும் மகளிரணி, வர்த்தகர் அணி மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த மாநாட்டில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டத்துக்குட்பட்ட சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள், நகர கிளை நிர்வாகிகள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இறுதியாக மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
*தீர்மானம் 1: தாமிரபரணி நதியை பாதுகாக்க அவசர கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.*
தாமிரபரணி நதியை பாதுகாக்க அவசர கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.தென் தமிழ்நாட்டின் உயிர்நாடியாக விளங்கும் தாமிரபரணி நதி தற்போது கடுமையான சுற்றுச்சூழல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. குடிநீர், விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் உயிரியல் சமநிலைக்கு அடிப்படையான இந்நதி, கழிவுநீர் கலப்பு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளவுக்கு மீறிய நீர் வழங்கல் போன்ற காரணங்களால் படிப்படியாக சீரழிந்து வருகிறது.
நகர, மாநகர பகுதிகளிலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக நதியில் கலக்கிறது. இதனால் நதிநீர் மாசடைந்து குடிநீருக்கு ஏற்றதாக இல்லாமல் போகிறது. மீன் வளமும் நீர்வாழ் உயிரினங்களும் அழிகின்றன. மக்களுக்கு தோல் நோய்கள், குடல் நோய்கள் போன்ற உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.
குடிநீருக்கும், விவசாயத்துக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டிய நிலையில், சில தனியார் தொழிற்சாலைகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் அதிக அளவு நீரைப் பெறுகின்றன. இதனால் விவசாய நிலங்கள் பாசனமின்றி வறட்சியில் வாடுகின்றன. கிராமப்புற மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது.
இந்த நிலை தொடர்ந்தால் தாமிரபரணி நதி எதிர்காலத்தில் “மாசடைந்த கால்வாய்” ஆக மாறிவிடும் அபாயம் உள்ளது. எனவே, வற்றாத ஜீவநதியைப் பாதுகாக்க மாநில அரசு உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து, சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே வெளியேற்ற வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நீரளவை மறுபரிசீலனை செய்து, பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் முதன்மை அளிக்க வேண்டும். தாமிரபரணி நதிக்கென தனி பாதுகாப்பு ஆணையம் அமைத்து, தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். உள்ளூர் மக்கள், விவசாயிகள், மாணவர்கள் பங்கேற்கும் நதி பாதுகாப்பு இயக்கங்களை ஊக்குவிக்க வேண்டும் என இந்த மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
*தீர்மானம் 2 : பொருநை அருங்காட்சியகம் திறப்பு மற்றும் காயிதே மில்லத் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டிய முதல்வருக்கு நன்றியும், பாராட்டுகளும்*
திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்ததற்கும், பாளையங்கோட்டையில் காயிதே மில்லத் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டியதற்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு இந்த மாநாடு மனமார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
3200 ஆண்டுகால தமிழர்களின் வரலாறு மற்றும் பண்பாட்டை உலகிற்கு எடுத்தியம்பும் வகையில் திருநெல்வேலி ரெட்டியார்பட்டி மலையில் அமைக்கப்பட்ட பொருநை அருங்காட்சியகத்திற்காக தமிழ்நாடு அரசுக்கு இந்த மாநாடு தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் 67.25 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த நவீன அருங்காட்சியகம், தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்தின் தொன்மையை உலகிற்கு பறைசாற்றுகிறது. தமிழர்களின் வரலாற்றை மறைப்பதற்கும் மாற்றுவதற்கும் பல்வேறு முயற்சிகள் நடந்து வரும் நிலையில், உண்மையான வரலாற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் முக்கியப் பணியை இந்த அருங்காட்சியகம் செய்யும் என்று இந்த மாநாடு நம்பிக்கை தெரிவிக்கிறது.
சிவகளை மற்றும் கொற்கையில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த அரிய பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்படுவதால், ஆய்வாளர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை இது நிச்சயம் கவரும். திறக்கப்பட்ட முதல் ஐந்து நாட்களிலேயே 25,000க்கும் மேற்பட்டோர் இதைக் கண்டு களித்திருப்பது, மக்கள் மத்தியில் இதற்கு ஏற்பட்டுள்ள வரவேற்பை காட்டுகிறது.
தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட் என்று போற்றப்படும் பாளையங்கோட்டையில்ில் 100 கோடி ரூபாய் செலவில் கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் புதிய நூலகத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சருக்கு இந்த மாநாடு நன்றி தெரிவித்துக்கொள்கிறது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் போன்றவற்றின் வரிசையில் இந்த நூலகம் திருநெல்வேலி மற்றும் அண்டை மாவட்ட மக்களின் அறிவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் மையமாக அமையும் என்பதில் மாற்றமில்லை. இந்த நூலகப் பணிகளை விரைவில் முடிக்க தமிழ்நாடு அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.
*தீர்மானம் 3 – வாக்காளர் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்களை மாஞ்சோலை மலை கிராமங்களில் முறையாக நடத்த வேண்டும்!*
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாஞ்சோலை மலைக் கிராமங்களில் ஏறத்தாழ 1000 வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தின்போது இவர்களின் பெயர்கள் நிரந்தரமாக குடி பெயர்ந்தவர்கள் என்ற காரணத்தினால் நீக்கப்பட்டுள்ளன. ஆனால் இவர்கள் தொடர்ந்து அப்பகுதியிலேயே வசித்து வருகின்றனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்களை அறிவித்துள்ள நிலையில், மாஞ்சோலை மலைக்கிராமங்களுக்கு எந்த அதிகாரிகளும் வராததால் மக்கள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதனால், தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் மீண்டும் இணைக்க முடியாமல், பாதிக்கப்பட்ட மக்கள் வாக்குரிமையை இழக்கும் ஆபத்தில் உள்ளனர். எனவே, மாஞ்சோலை மலைக்கிராமங்களில் வாக்காளர் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்களை முறையாக நடத்தி, பொதுமக்களின் அடிப்படை வாக்குரிமையை பாதுகாக்க வேண்டும் என்று இந்த மாநாடு தேர்தல் ஆணையத்தையும் மாநில அரசையும் கேட்டுக்கொள்கிறது.
*தீர்மானம் 4 – வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பில் வாக்காளர்கள் அலைக்கழிப்பு – கண்டனத்திற்குரியது*
எஸ்ஐஆர் தீவிர திருத்தத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் விடுபட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும், படிவத்துடன் எந்த ஆவணங்களைத் தருவது என்பதில் பெரும் குழப்பம் நிலவுகிறது. இதனால், நீக்கப்பட்ட அல்லது விடுபட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தேவையின்றி தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், எஸ்ஐஆர் கணக்கீட்டுப் படிவம் தொடர்பாக விளக்கம் கேட்டு, வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற 12.43 லட்சம் பேருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், உறவினர் பெயர்களில் உள்ள எழுத்துப்பிழைகள், மதம் மாறியவர்களாக இருந்தால் அவர்களை சந்தேக வாக்காளர்களாகக் கொண்டு நோட்டீஸ் அனுப்பியது உள்ளிட்ட விளக்கங்களை கோரியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் இந்த செயல்பாடுகள் வாக்காளர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது. பெயர் எழுத்துப் பிழைகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் தட்டச்சுத் தவறால் நடந்ததாகும். அதற்கு வாக்காளர்களைப் பொறுப்பாக்குவது ஏற்புடையதல்ல.
ஆகவே, வாக்காளர்களை அலைக்கழிக்காமல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படுவதற்கு ஆதார், ரேஷன் கார்டு அல்லது பள்ளிச் சான்றிதழ் போன்ற ஆவணங்களைப் போதுமானதாக எடுத்துக்கொள்ள வேண்டும். மேலதிக ஆவணங்களை கோரி அலைக்கழிக்கக் கூடாது எனவும், மதம் மாறியவர்கள், திருமணத்தால் பெயர் மாறியவர்கள், ராசிக்காக பெயர்களை மாற்றியவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தனிப்பட்ட காரணங்களால் நோட்டீஸ் அனுப்புவதை தவிர்க்க வேண்டும் எனவும் இந்த மாநாடு வலியுறுத்துகிறது.
*தீர்மானம் 5: இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்*
‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஒருநாள் இடைவெளியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடு இருப்பது ஏற்புடையதல்ல. ஒரே பணியைச் செய்யும் இருதரப்பு இடைநிலை ஆசிரியர்களிடையே ஊதிய முரண்பாடு நிலவுவது நியாயமற்றது. எனவே, தமிழக அரசு அவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும், பணி நிரந்தரம் கோரி போராடிவரும் பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் கோரிக்கையையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என இந்த மாநாடு வலியுறுத்துகிறது.
ஜே அமல்ராஜ் மாவட்ட தலைமை செய்தியாளர் தென்காசி.


