Tue. Jul 22nd, 2025



தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள குலையநேரி பகுதியில் 7 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்த உள்ளதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் இந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

விவசாயிகள் கோரிக்கை:
குலையநேரி பெரிய குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணியை தமிழக அரசு விரைவாக தொடங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாகும். இதற்காக குலையநேரி பெரியகுளம் – பாப்பான் கால்வாய் 13 நம்பர் மடைவழியாக கள்ளம்புளி குளத்திற்கு தனி கால்வாய் மற்றும் பைப் லைன் சேனல் மூலம் தண்ணீர் செலுத்த ரூ.2.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

விரைவாக தீர்வு கிடைக்காவிட்டால்:

மாவட்ட ஆட்சியரிடம் ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், சாலை மறியல் போராட்டம் நடத்தவும் விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர்.


இந்த விவகாரம் தற்போது அரசு மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

– அமல்ராஜ், மாவட்ட தலைமை நிருபர், தென்காசி

By TN NEWS