ஆனைமலை தென் சித்தூர் குடிநீர் வசதிக்கு புதிய மேல்நிலைத் தொட்டி அவசியம் – அரசின் உடனடி நடவடிக்கை கோரிக்கை
கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம், தென் சித்தூர் ஊராட்சியில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த ஊராட்சியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மக்கள் குடிநீர் வசதிக்காக இரண்டு மேல்நிலைத் தொட்டிகளை மட்டுமே நம்பி இருக்கின்றனர்.
திறன் குறைவு – மக்களுக்கு பாதிப்பு
மொத்தம் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த மேல்நிலைத் தொட்டிகள் மக்கள் தேவைக்கு போதுமானதாக இல்லாததால், குடிநீர் மற்றும் உப்பு தண்ணீர் ஒன்றாகவே சேமித்து வைக்கப்படுகிறது. இதன் காரணமாக, சிறுவர் முதல் முதியவர்கள் வரை சளி, காய்ச்சல் போன்ற உடல் நலக்குறைவுகளால் பாதிக்கப்படுகின்றனர்.
புதிய மேல்நிலைத் தொட்டிக்கு கோரிக்கை
இந்த குடிநீர் பிரச்சினையை தீர்க்க, 2,00,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலைத் தொட்டியை அமைக்க வேண்டும் என புகார் மனுக்கள் பலமுறை அளிக்கப்பட்டுள்ளன. எனினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, அரசு அதிகாரிகள் இந்த கோரிக்கையை உடனடியாக ஏற்று, புதிய மேல்நிலைத் தொட்டி அமைத்து பொதுமக்களின் குடிநீர் தேவையை தீர்க்க வேண்டும் என கோவை மாவட்ட நிருபர் சி. முருகானந்தம் (தமிழ்நாடு டுடே) கேட்டுக்கொள்கிறார்.
