Tue. Jul 22nd, 2025

வாகைக்குளம் பொதுமக்கள் குடிநீர் பிரச்சினை – அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்

அம்பாசமுத்திரம், பிப்ரவரி 28:
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாகைக்குளம் ஊராட்சி மன்ற பொதுமக்களுக்கு கடனாநதி ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததல்ல என முன்னாள் மாவட்ட ஆட்சியர் கருநாகராஜ் மற்றும் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் உறுதி செய்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, கோடாரங்குளம் வழியாக தாமிரபரணி ஆற்றிலிருந்து சுத்தமான குடிநீர் பொன்னகர் வழியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், சாட்டுப்பத்து மற்றும் பிரம்மதேசம் வழியாகவும் தாமிரபரணி குடிநீர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், தற்போது வாகைக்குளம் பகுதியில், குடிநீர் வழங்கும் முறையில் மாற்றம் செய்யப்பட்டு, மீண்டும் மக்களுக்கு குடிப்பதற்கு உகந்ததல்லாத கடனாநதி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் உடல்நலக்குறைவுக்கு ஆளாகும் அபாயம் எழுந்துள்ளது. மேலும், வீட்டு குழாய் இணைப்புகளில் கிடைக்கும் தண்ணீர் மிகவும் குறைவாக இருக்கிறது, மேலும் அது சுத்தமற்றதாகவும், மண் கலந்ததாகவும் உள்ளது.

எனவே, பொதுமக்களின் அடிப்படை உரிமையான சுத்தமான குடிநீர் வழங்கும் பொருட்டு, கடனாநதியிலிருந்து தண்ணீர் வழங்குவதை உடனடியாக நிறுத்தி, முன்பு போல் தாமிரபரணி ஆற்றிலிருந்து கிடைக்கும் சுகாதாரமான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் சமூக ஆர்வலர் ஜி. கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் புகார் மனு அளித்துள்ளார். மேலும், பொதுமக்கள் தண்ணீர் குறைபாடு மற்றும் அதன் தரம் குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை சேர்த்து வழங்கியுள்ளதால், அதிகாரிகள் விரைவாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

By TN NEWS