Tue. Jul 22nd, 2025



கோவை: கோவை மாவட்டம், ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள சோமந்துறை சித்தூர் கிராமத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து, பொதுமக்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றனர்.

தொடர்ச்சியாக சில மாதங்களாக இந்த பிரச்சனை குறித்து அதிகாரிகளிடம் புகார்கள் எழுப்பப்பட்டாலும், இதுவரை எந்த விதமான அதிகாரப்பூர்வ (official ) நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இரவு நேரங்களில் வாகனத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், இந்த தெரு நாய்களின் தாக்குதலால் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கில், கடந்த 29.07.2024 அன்று பொள்ளாச்சி துணை ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. அதன் பிறகு, மனு ஆனைமலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்குப் பரிமாறப்பட்டு, அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டனர். இதனையடுத்து, 08.08.2024 அன்று மனு, பொள்ளாச்சி நகராட்சி ஆணையருக்குப் பரிமாறப்பட்டது.

ஆனால், கடந்த ஆறு மாதங்களாகியும் எந்தத் தீர்வும் எடுக்கப்படவில்லை. இதனால், மக்கள் அதிருப்தியடைந்து, நகராட்சி அலுவலகம் இந்த பிரச்சனைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.

தெரு நாய்கள் பிரச்சனை தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான கிராமங்களில் பொதுமக்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது. எனவே, அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, நிரந்தர தீர்வை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

– முருகானந்தம்
கோவை மாவட்ட செய்தியாளர், தமிழ்நாடு டுடே

By TN NEWS