Tue. Jul 22nd, 2025



தமிழ்நாடு, 13 ஜனவரி 2025: கடந்த காலங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வங்கிகளில் எடுத்த தங்க நகைக் கடன்களை வருடம் ஒருமுறை வட்டி மட்டும் செலுத்தி புதுப்பித்து வந்த நிலையில், 2025 ஜனவரி 1 முதல் ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், அசலையும் வட்டியையும் சேர்த்து கட்டி தான் ரினிவல் செய்ய வேண்டும் என மத்திய அரசு விதிமுறையை மாற்றியுள்ளது.

இந்த மாற்றத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் தங்களின் நகைகளை அடகு வைத்து, அதில் கிடைக்கும் பணத்தை விவசாய பணிகளில் பயன்படுத்தி வந்தனர். தற்போது, அசலையும் வட்டியையும் சேர்த்து கட்ட வேண்டிய நிலை விவசாயிகளுக்கு கடன்சுமையை அதிகரித்துள்ளது.

ஒரு விவசாயி 3 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தால், ரினிவல் செய்யும்போது, முழுத்தொகையையும் ஒரே நாளில் கட்டுவதற்கு அவசரத்தில் வெளிநபர்களிடமிருந்து உயர் வட்டியில் கடன் பெற வேண்டிய சூழல் உருவாகிறது. இதனால், பல விவசாயிகள் தங்கள் நகைகளை ஏலத்துக்குக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், மத்திய அரசு வழங்கி வந்த 4% மானியத்தையும் நிறுத்தியதன் விளைவாக, விவசாயிகள் மேலும் நிதிநெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்த மானியத்தை மறுபடி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“விவசாயிகள் தங்களின் நிலையை மாற்ற முடியாமல் தவிக்கின்றனர். பழைய முறையிலேயே வட்டி மட்டும் செலுத்தி கடன்களை புதுப்பிக்கும் அனுமதியை மத்திய அரசு வழங்க வேண்டும்” என அனுமன் நதி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அந்தோணி பனிஸ்டன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக கருத்தில் கொண்டு, விவசாயிகளின் நலனுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

தகவல்: அனுமன் நதி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்

சேக்முகைதீன்

By TN NEWS