கனிம வள லாரிகள் பகலில் பாலத்தில் சென்றால் பாலம் சேதம் ஏற்படும். இரவில் சென்றால் சேதம் ஏற்படாதா என பொதுமக்கள் கேள்வி?
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக என்று கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக அப்போது மேம்பாலம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி மார்த்தாண்டத்தில் தொங்கு மேம்பாலம் அமைக்கப்பட்டது. அந்த மேம்பாலம் தொடர்ந்து சேதம் ஏற்பட்டு வருகிறது. பல ஆண்டுகள் நீடித்து உழைக்கும் என்று கூறி கட்டப்பட்ட மேம்பாலம் சில ஆண்டுகளிலேயே போக்குவரத்துக்கு தகுதியற்றதாக மாறி வருகிறது.
சமீபத்தில் இரண்டாம் முறையாக மேம்பாலத்தில் ஓட்டை விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டவுடன் பல நாட்கள் மேம்பாலம் மூடி வைக்கப்பட்டு தற்காலிகமாக சேதம் சரி செய்யப்பட்டது. அதன் பின்னர் கனிம வள லாரிகள் மேம்பாலத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டது. கேரளாவுக்கு கனிமங்கள் கடத்திச் செல்லும் கனிமவள லாரிகள் போலி பாஸ்கள் மூலம் இயங்குவது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் ஒன்றிரண்டு நாட்கள் சோதனைகள் நடத்தி மாய்ந்து போனது.
தற்போது கேரளாவுக்கு அதிக அளவில் கனிம வள கடத்தல் நடந்து வருகிறது. அதுவும் மார்த்தாண்டம் மேம்பாலம் வழியே இரவில் கனரக கனிமவள லாரிகள் சிட்டாய் பறந்து வருகிறது. பகலில் கனிமவள லாரிகள் மேம்பாலத்தில் செல்ல தடை என்று கூறி போக்குவரத்து போலீசாரையும் நிறுத்தி கனிம வள லாரிகள் மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக செல்ல வைத்து வருகின்றனர். ஆனால் இரவில் கனிமவள லாரிகள் மேம்பாலத்தில் கனிம வளங்களுடன் தங்கு தடை இன்றி சென்று வருகிறது.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேம்பாலத்தில் கீழ்பகுதி வழியாக கனிம வள லாரிகள் சென்று வருவதால் சாலை சீரமைத்த இரண்டு நாட்களிலேயே சிதிலமடைந்து உள்ளது. அது தொடர்பான வீடியோவும் பதிவாகியுள்ளது. அதுவே மேம்பாலத்தில் தொடர்ந்து பயணம் செய்ய அனுமதித்தால் மேம்பாலத்தின் நிலை என்ன என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.
குறிப்பாக பாலம் உறுதித் தன்மையற்ற நிலையில் இருப்பதால் கனிம வள லாரிகள் மேம்பாலத்தில் செல்ல தடை விதித்த நிலையில் தற்போது இரவு முழுவதும் கனரக கனிம வள டாரஸ் லாரிகள் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் தங்கு தடை இன்றி சென்று வருவதால் மேம்பாலம் மீண்டும் சேதமடைந்து உயிர் சேதத்தை ஏற்படுத்தி வரும் அச்சுறுத்தலான நிலை ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இரவில் மேம்பாலத்தில் கனிமவள டாரஸ் லாரிகள் சென்று வருவதை ரோந்து போலீசாரோ அல்லது மார்த்தாண்டம் காவல் நிலைய போலீசாரோ தடுக்காதது ஏன் என்று தான் தெரியவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே இரவில் மேம்பாலத்தில் கனிமவள லாரிகள் சென்று வருவதை அனுமதிப்பதாக இருந்தால் பகலிலும் அனுமதிப்பதில் என்ன தவறு என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆகவே கனிமவள கடத்தல் லாரிகளுக்கு மார்த்தாண்டம் மேம்பாலத்தில் செல்ல பகல் மற்றும் இரவு நேரங்களில் முழுமையாக தடை விதித்தால் மட்டுமே மேம்பாலம் கனிமவள டாரஸ் லாரிகளின் இயக்கத்தினால் ஏற்படும் சேதத்தை ஓரளவாவது தடுக்க முடியும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


