அரசாங்கம் “கனவு இல்லம்” போன்ற பெரிய குடியிருப்பு திட்டங்களை அறிவிப்பது மக்களுக்கு நிச்சயமாக மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாகும். ஆனால், ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்தாலும் அந்த வீட்டில் வசிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான கழிப்பறை வசதி என்பது இன்றளவும் பல இடங்களில் எட்டாக்கனவாகவே உள்ளது.
அரசாங்கத்தின் கணக்கில் கிராமங்களில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், எதார்த்த நிலைமை பல இடங்களில் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. இன்னும் பல கிராமங்களில் பெண்கள் அதிகாலை இருட்டிலும், இரவு நேரங்களிலும் இயற்கை உபாதைகளை கழிக்க வெளியே செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது வெறும் வசதி குறைபாடு மட்டுமல்ல; பெண்களின் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் மனித மரியாதையுடன் தொடர்புடைய மிக முக்கியமான பிரச்சனையாகும்.
பல இடங்களில் கட்டப்பட்ட பொதுக் கழிப்பறைகளும் முறையாக பராமரிக்கப்படாமல் பாழடைந்த நிலையில் கிடக்கின்றன. இதனால் அவை பயன்பாட்டிற்கு தகுதியற்றதாக மாறி, மக்கள் மீண்டும் திறந்த வெளிகளை நாட வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் பெரிய வீடுகள் கட்டித் தரும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதைப் போலவே, தற்போது உள்ள வீடுகளிலேயே கழிப்பறை அமைக்கும் திட்டங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குறிப்பாக, வீட்டுக்கு வீடு கழிப்பறை கட்டுவதற்கான நிதியை நேரடியாக மக்களுக்கு வழங்கும் முறையை வலுப்படுத்துவது அவசியமாகிறது.
இயற்கை உபாதையை கழிக்க சென்ற மாணவிக்கு நேர்ந்த கொடுமை போன்ற சம்பவங்கள், கிராமப்புறங்களில் கழிப்பறை வசதி எவ்வளவு அவசியமானது என்பதை மீண்டும் ஒருமுறை சமூகத்துக்கும் அரசுக்கும் நினைவூட்டுகின்றன. பெண்களின் பாதுகாப்பும் கண்ணியமும் காக்கப்படும் சமுதாயத்தை உருவாக்க வேண்டுமெனில், முதலில் ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை என்ற அடிப்படை வசதி உறுதி செய்யப்பட வேண்டும்.
வெங்கடேஷ்
செய்தி ஆசிரியர்.
