Sun. Mar 15th, 2026

ஊத்துக்கோட்டை அருகே குடிநீரில் துர்நாற்றம்….?

கீழ்கருமனூர் கண்டிகை கிராம மக்கள் அச்சம் – குடிநீர் மாதிரி ஆய்வுக்கு அனுப்பி வைப்பு.

திருவள்ளூர் மாவட்டம்:
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கீழ்கருமனூர் கண்டிகை கிராமத்தில் குடிநீரில் துர்நாற்றம் வீசிய சம்பவம் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து வந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் குடிநீரின் மாதிரிகளை சேகரித்து ஆய்விற்கு அனுப்பியதுடன், கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொண்டனர்.

2000-க்கும் மேற்பட்டோர் வசிக்கும் கிராமம்.

ஊத்துக்கோட்டை அருகே உள்ள கீழ்கருமனூர் கண்டிகை கிராமத்தில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஊராட்சி நிர்வாகம் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரை பயன்படுத்திய போது அதில் துர்நாற்றம் வீசுவதை கிராம மக்கள் கவனித்து அதிர்ச்சி அடைந்தனர்.

பொதுமக்கள் நேரில் உறுதி….!

இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து வரும் தண்ணீரை பாட்டில்களில் சேகரித்து நுகர்ந்து பார்த்தனர். அப்போது தண்ணீரில் துர்நாற்றம் இருப்பது உறுதி செய்யப்பட்டதால், உடனடியாக சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சுகாதாரத்துறை ஆய்வு….?

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் கிராமத்திற்கு விநியோகிக்கப்படும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்தனர். மேலும் கிராம மக்கள் பயன்படுத்திய குடிநீரின் மாதிரிகளை சேகரித்து ஆய்விற்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவ குழு பரிசோதனை…!

பின்னர் பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் கொண்ட மருத்துவ குழு கிராமத்திற்கு சென்று, குழந்தைகள் உட்பட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

அதிகாரிகள் விளக்கம்…?

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
“இதுவரை கிராம மக்களில் யாருக்கும் எந்தவித உடல்நல பாதிப்பும் பதிவாகவில்லை. ஆய்விற்கு அனுப்பியுள்ள குடிநீர் மாதிரிகளின் ஆய்வறிக்கை வந்த பிறகு முழு விவரம் தெரியவரும்” என்றனர்.

திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்
மா. மருதுபாண்டி

By TN NEWS