Fri. Mar 13th, 2026

கடலூர் | மார்ச் 12

கடலூர் மாவட்டத்தில் பிச்சாவரம் பகுதியில் சுரபுன்னை மாங்குரோவ் ஆராய்ச்சி மையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஒருங்கிணைந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொதுமக்கள் கருத்து கேட்பு நடத்த வேண்டும்

இந்த ஆராய்ச்சி மையத்தை பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் கட்ட திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் அதற்கு முன் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குற்றம்சாட்டினர். அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

மாற்று இடம் தேர்வு செய்ய கோரிக்கை

இந்த ஆராய்ச்சி மையத்தை மக்கள் வசிக்கும் இடத்தில் அமைப்பதை தவிர்த்து, மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர்.

அரசியல் கட்சிகள் பங்கேற்பு

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் இரமேஷ் பாபு கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழ. வாஞ்சிநாதன், ஒன்றிய செயலாளர் ஜி. ஆழ்வார், விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் பி. கற்பனை செல்வம், ஒன்றிய குழு உறுப்பினர் திருஞானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் சி.பி.எம்., அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.

சிவக்குமார், சிதம்பரம் செய்தியாளர்

By TN NEWS