Fri. Mar 6th, 2026

கன்னியாகுமரி, மார்ச் 6:
இப்போதெல்லாம் இரவு நேரங்களில் சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டுநர்கள் அதிகளவில் விபத்து அபாயத்தை சந்தித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பல கார் ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் வாகனங்களை இயக்கும் போது எப்போது ஹைபீம் பயன்படுத்த வேண்டும், எப்போது டிம்மில் மாற்ற வேண்டும் என்ற அடிப்படை விதிகளைப் பின்பற்றாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

காரில் ஏறிய உடனே முகப்பு விளக்கை ஹைபீம் நிலையில் வைத்து கொண்டு தொடர்ந்து ஓட்டுவதால் எதிரே வரும் வாகன ஓட்டுநர்களுக்கு சாலை தெளிவாக தெரியாத சூழ்நிலை உருவாகிறது. இதனால் கண்ணில் கூசும் அளவுக்கு வெளிச்சம் ஏற்பட்டு விபத்து அபாயம் அதிகரிக்கிறது.

எதிரே வரும் வாகன ஓட்டுநர்கள் பலமுறை டிம்மடித்து சைகை கொடுத்தாலும், சிலர் ஹைபீம் விளக்கை குறைக்காமல் தொடர்ந்து அதே நிலையில் பயணம் செய்கிறார்கள். இதனால் எதிரே வரும் வாகன ஓட்டுநர்கள் சாலையை தெளிவாக பார்க்க முடியாமல் வாகனத்தை ஓரமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.

மேலும் சிலர் இரண்டாம் தர கார்கள் வாங்கி அதில் அதிக வெளிச்சம் தரும் வெள்ளை நிற LED விளக்குகளை வெளி மார்க்கெட்டில் வாங்கி பொருத்துவதால் இந்த பிரச்சனை மேலும் அதிகரித்து வருகிறது.

இதனால் இரவு நேரங்களில் சாலைகளில் பயணம் செய்வது மிகவும் சிரமமாகவும் அபாயகரமாகவும் மாறி வருவதாக வாகன ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே மாவட்ட போக்குவரத்து காவல்துறை இரவு நேரங்களில் சோதனை நடத்தி, விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், பொதுமக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இல்லையெனில் எதிர்காலத்தில் இரவு நேர சாலை விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக வாகன ஓட்டுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

செய்தியாளர்:
ஷாலு V.J
தமிழ்நாடு டுடே – கன்னியாகுமரி மாவட்டம்




By TN NEWS