பிப்ரவரி 12
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொதுமக்களிடம் இருந்து கருத்துகளை சேகரிக்கும் சிறப்பு இயக்கம் நடைபெற்றது. இந்த இயக்கம், பாஜகவின் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வடிவமைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டது.
இந்த கருத்துக் கேட்பு இயக்கத்திற்கு, பாஜக குடியாத்தம் நகர தலைவர் திரு. எம்.கே. ஜெகன் தலைமை வகித்தார். குடியாத்தம் நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கல்லூரி மாணவர்கள், மகளிர், இளைஞர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது தேவைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாகவும், வாய்மொழியாகவும் பதிவு செய்தனர்.
பொதுமக்கள் தெரிவித்த முக்கிய கருத்துகளில்,
வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முன்னேற்றம்,
கல்வி மற்றும் மாணவர் நலத்திட்டங்கள்,
பெண்கள் பாதுகாப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகள்,
அடிப்படை வசதிகள், சாலை, குடிநீர், மின்சாரம்,
இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டங்கள்
போன்றவை முக்கியமாக இடம்பெற்றன.
இந்த நிகழ்ச்சியில் நகர நிர்வாகிகள் சிவன், கமலஹாசன், ஜோதி, இளங்கோ, ராஜா, கணேஷ், மணிகண்டன், சண்முகம், வாசு, பார்த்திபன், ராதிகா ஆகியோரும், மாவட்ட நிர்வாகிகள் ஸ்ரீகாந்த், ரங்கநாதன், ரேகா, தேவி, ரமணா, சுமதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் நேரடியாக உரையாடி அவர்களின் கருத்துகளை பதிவு செய்தனர்.
நிகழ்ச்சியின் முடிவில் பேசிய நகர தலைவர் திரு. எம்.கே. ஜெகன்,
“மக்களுக்காக மக்களிடமிருந்து கருத்துகளை கேட்டு, அதனை அடிப்படையாகக் கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். குடியாத்தம் மக்களின் குரல் நேரடியாக மாநில மற்றும் தேசிய தலைமையிடம் கொண்டு செல்லப்படும்” என தெரிவித்தார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்
