Sat. Feb 7th, 2026

விஐடி வளாகத்தில் விவசாயிகளின் பெருவிழா
வேலூர் மாவட்டத்தில், VIT University வளாகத்தில் நடைபெற்ற இரண்டு நாள் உழவர் சங்கமம் 2026 (8-வது பதிப்பு) இன்று பிரமாண்டமாக நிறைவடைந்தது. விஐடி வேளாண் கண்டுபிடிப்புகள் மற்றும் மேம்பட்ட கற்றல் பள்ளி (VAIAL) ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுடன் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

145-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் – நவீன வேளாண் தொழில்நுட்பங்கள்.
இந்த உழவர் சங்கமத்தில், ICAR-தேசிய வாழைப்பழ ஆராய்ச்சி மையம் (NRCB) அறிமுகப்படுத்திய 9 புதிய வாழை வகைகள், புதுமையான நீர் சேமிப்பு தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட அதிநவீன வேளாண் முன்னேற்றங்களை விளக்கும் 145-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. விவசாயிகள் நேரடியாக தொழில்நுட்பங்களை அறிந்து பயன்பெறும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டது.

விளைச்சல் உயர்வு, மண் ஆரோக்கியம், நீர் மேலாண்மை
பயிர் விளைச்சலை தற்போதைய 30%–60% திறனிலிருந்து உயர்த்துவது, மண் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பது மற்றும் நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக, கோதாவரி–காவிரி நதி இணைப்புத் திட்டம் போன்ற நீர்வள மேலாண்மை முயற்சிகளின் அவசியம் குறித்து முக்கியமான நுண்ணறிவுகள் பகிரப்பட்டன.

பிரமுகர்கள் பங்கேற்ற தொடக்க விழா
நிகழ்ச்சியின் தொடக்க விழாவில், விஐடி நிறுவனர் ஜி.விஸ்வநாதன் தலைமையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்துகொண்டனர். தலைமை விருந்தினராக ஆர்.செல்வராஜன் (ICAR–தேசிய வாழைப்பழ ஆராய்ச்சி மைய இயக்குநர், திருச்சி) கலந்து கொண்டார். மேலும், கே.பி.ஸ்ரீனிவாசன், Coromandel International Limited நிறுவனத்தின் துணைத் தலைவர் & வணிகத் தலைவர், என்.சுரேஷ் (IFFCO மாநில சந்தைப்படுத்தல் மேலாளர்) உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

விஐடி நிர்வாகிகள் பங்கேற்பு
நிகழ்வில் விஐடி நிர்வாக இயக்குநர் சந்தியா பெண்டாரெட்டி மற்றும் துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்டு விவசாய வளர்ச்சிக்கான கல்வி–ஆராய்ச்சி இணைப்பின் அவசியத்தை எடுத்துரைத்தனர்.

தி. தென்பாண்டியன்,
வேலூர் மாவட்ட செய்தியாளர்

By TN NEWS