Wed. Feb 4th, 2026

வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே அமைந்துள்ள கோட்டூர் தேவி நாயக்கன்பட்டி கிராமத்தில், விவசாயம் செழிப்படைய வேண்டி தைப்பூச தினத்தன்று ‘நிலா பெண்’ வழிபாடு எனப்படும் பாரம்பரிய வழிபாடு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சிறுமி தேர்வு – எட்டு நாள் விரதம்:

இந்த ஆண்டிற்கான வழிபாட்டில், கிராமத்தைச் சேர்ந்த சிறுமிகளில் இருந்து, எட்டு நாள் வழிபாட்டு முறையில் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து கடைப்பிடித்த ஜெயராமச்சந்திர மூர்த்தி – மகாலட்சுமி தம்பதியின் 13 வயது மகள் ஜியா ஸ்ரீ ‘நிலா பெண்’ ஆக தேர்வு செய்யப்பட்டார்.

சரளி மலை வழிபாட்டு தொடக்கம்:

தேர்வு செய்யப்பட்ட ஜியா ஸ்ரீயை கிராம பெண்கள் ஊர் எல்லையில் உள்ள சரளி மலைக்கு அழைத்துச் சென்று, ஆவாரம் பூக்களால் அலங்கரித்து, ஆவாரம் பூக்கள் நிரம்பிய கூடையை சுமந்தபடி ஊர்வலமாக ஊருக்குள் அழைத்து வந்தனர்.

மாரியம்மன் கோவிலில் கும்மியாட்டம்:

பின்னர் நிலா பெண்ணை மாரியம்மன் கோவில்க்கு அழைத்துச் சென்று, தோழிகளுடன் அமர வைத்தனர். அங்கு பெண்கள் கும்மியடித்து, விடிய விடிய பாரம்பரியப் பாடல்கள் பாடி வழிபாடு நடத்தினர்.

மாசடச்சி அம்மன் கோவிலில் சடங்குகள்:

அதனைத் தொடர்ந்து மாசடச்சி அம்மன் கோவில்க்கு சிறுமியை அழைத்து சென்றனர். அங்கு முறை மாமன்கள் இணைந்து பச்சை தென்னை மட்டையால் குடிசை அமைத்து, அதில் நிலா பெண்ணை அமர வைத்து சடங்குகள் மேற்கொண்டனர். தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து சீர் செய்தனர்.

கிணற்றில் விளக்கு மிதக்கும் வழிபாடு:

பின்னர் ஊர் எல்லையில் உள்ள கிணற்றுக்கு அழைத்துச் சென்று, கூடையில் வைத்திருந்த ஆவாரம் பூக்களை கிணற்றுத் தண்ணீரில் போட்டு, மண் கலயத்தில் விளக்கு ஏற்றி தண்ணீரில் மிதக்க விட்டுப் பூஜை செய்தனர். அதன் பின்னர் கிராம மக்கள் ஊர் திரும்பினர்.

ஏழு நாட்கள் அணையாத விளக்கு – ஐதீகம்:

இந்த விளக்கு ஏழு நாட்கள் அணையாமல் எரிந்து கொண்டே இருக்கும் என்பது கிராம மக்களின் ஐதீக நம்பிக்கையாகும். விவசாய வளம், மழை செழிப்பு மற்றும் கிராம நலன் வேண்டி இந்த வினோத வழிபாடு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.


செய்தி தொகுப்பு:
சித்திர பிரகாஷ்
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்

By TN NEWS